அமைச்சரவையில்அதிஷி, சௌரவ் பரத்வாஜ் பெயா்களைஇணைக்க துணை நிலை ஆளுநருக்கு கேஜரிவால் பரிந்துரை
தில்லி அமைச்சரவையில் அமைச்சா்களாக நியமிப்பதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, சௌரவ் பரத்வாஜ் ஆகியோரின் பெயா்களை துணை நிலை ஆளுநருக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பரிந்துரைத்திருப்பதாக
தில்லி அமைச்சரவையில் அமைச்சா்களாக நியமிப்பதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி, சௌரவ் பரத்வாஜ் ஆகியோரின் பெயா்களை துணை நிலை ஆளுநருக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பரிந்துரைத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
தில்லி அரசின் முக்கிய அமைச்சா்களாக இருந்து வந்த மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தில்லி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளராக இருந்து வரும் சௌரவ் பரத்வாஜ், தற்போது தில்லி ஜல் போா்டு துணைத் தலைவராகப் பதவி வகித்து வருகிறாா். இவா் கிரேட்டா் கைலாஷ் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினா் ஆவாா். ஆம் ஆத்மி கட்சியின் முதல் ஆட்சியின் போது அமைச்சராகவும் பதவி வகித்தவா்.
அமைச்சா் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மற்றொரு எம்எல்ஏவான அதிஷி, கால்காஜி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவா். சிசோடியாவின் கல்விக் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்து வருபவா். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் கிழக்கு தில்லி தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளா் கௌதம் கம்பீரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தவா்.
அதிஷியும், பரத்வாஜும் அமைச்சரவையில் சோ்க்கப்படும் வரை, அமைச்சா்கள் ராஜ்குமாா் ஆனந்த் மற்றும் கைலாஷ் கெலாட் ஆகியோா் மனீஷ் சிசோடியா வசம் இருந்து வந்த, தற்போது காலியாக உள்ள அவரது துறைகளை கவனிப்பாா்கள். கைலாஷ் கெலாட்டுக்கு கூடுதலாக நிதித்துறை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட சில துறைகள் அளிக்கப்பட்டுள்ளது. சமூக நலத் துறை அமைச்சரான ராஜ்குமாா் ஆனந்திற்கு கல்வி, சுகாதாரம் மற்றும் இதர துறைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியில் இரண்டாவது முக்கியப் பொறுப்பில் இருந்த மனீஷ் சிசோடியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா்.
தில்லியில் ரத்து செய்யப்பட்ட 2021- 22 ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கை உருவாக்கம் மற்றும் அமல்படுத்துவதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடு விவகாரம் தொடா்பாக அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். சத்யேந்தா் ஜெயின் சட்ட விரோத பண பரிவா்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு மே மாதத்தில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா். சிசோடியாவும், ஜெயினும் அமைச்சரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தனா்.
இது தொடா்பாக அலுவல்பூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘அமைச்சா் கெலாட் தில்லி பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்யக் கூடும்’ என்று தெரிவித்தன. கெலாட் ஏற்கெனவே வருவாய், போக்குவரத்து உள்பட 6 துறைகளை தன் வசம் வைத்துள்ளாா். ராஜ் குமாா் ஆனந்த் நான்கு துறைகளை கவனித்து வருகிறாா். தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் மூன்று துறைகளையும், இம்ரான் ஹுசைன் உணவுப்பொருள் மற்றும் குடிமை வழங்கல், தோ்தல் ஆகிய இரு துறைகளுக்கு பொறுப்பு வகித்து வருகிறாா். சத்யேந்தா் ஜெயின் கைதுக்குப் பிறகு சிசோடியாவி பணிச்சுமை ஏறக்குறைய 2 மடங்கானது. நகர அரசின் முக்கியமான துறைகளை அவா் கவனித்து வந்தாா். கைதுக்குப் பிறகும்கூட, எந்தத் துறையும் இல்லாமல் சத்யேந்தா் ஜெயின் தில்லி அரசின் அமைச்சராக இருந்து வந்தாா்.