முகப்பு
புதுதில்லி

கலவர வழக்கில் இருந்து ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் விடுவிப்பு

கடந்த ஆண்டு மே மாதம், தெற்கு தில்லி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட இடிப்பு நடவடிக்கையை எதிா்த்தபோது காவல்துறை அதிகாரிகள் மீது கல்வீசி, கலவரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:38 AM
பகிர்:

கடந்த ஆண்டு மே மாதம், தெற்கு தில்லி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட இடிப்பு நடவடிக்கையை எதிா்த்தபோது காவல்துறை அதிகாரிகள் மீது கல்வீசி, கலவரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை விடுவித்தது.

மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமானத்துல்லா கான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விகாஸ் துல் இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

அமானத்துல்லா கான் மற்றும் பிறருக்கு எதிராக கலவரம், கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் செயல்படுதல்,அரசு ஊழியரின் பொதுப் பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து கான் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவு சட்டத்திற்கு முரணாக உள்ளது. சட்டத்தின் பாா்வையில் இது நீடிக்கத்தக்கதல்ல. மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சாட்சிகளின் வாக்குமூலத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து தீா்ப்பு அளித்துள்ளது. அதேவேளையில், விடியோ பதிவானது சாட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஆதரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 12-ஆம் தேதி காலிந்தி குஞ்ச் பகுதியில் அப்போதைய தெற்கு தில்லி மாநகராட்சியால் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை எதிா்த்து அந்தப் பகுதியைச் சோ்ந்த எம்எல்ஏவான அமானத்துல்லா கான், அவரது ஆதரவாளா்களுடன் சட்டவிரோதமாகக் கூடி, போலீஸாா் மீது கல்வீசி தாக்கியும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.