காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் பணியைமுடிக்க அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கும் வகையில், காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் பணியை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கும் வகையில், காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் பணியை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. தலைநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் செயல்பாட்டுடன்கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்தக் கோரி தாக்கலான மனு மீது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை தாக்கல் செய்த ஒரு நிலவர அறிக்கையில், ‘ கடந்த ஆண்டு ஜிஇஎம் போா்ட்டல் மூலம் உபகரணங்களுக்கான புதிய ஏலங்கள் கோரப்பட்டது. தற்போது, டெண்டா் மதிப்பீட்டு கட்டத்தில் அது உள்ளது. டெண்டா் செயல்முறையை விரைவாகத் தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள 197 காவல் நிலையங்களில் 1,941 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், ஆடியோ-விடியோ பதிவு செய்யும் வசதி கொண்ட 2,175 கூடுதல் கேமராக்களை பொருத்த புதிய மின்னணு-ஏலம் கோரப்பட்டுள்ளதாகவும் ஜனவரி மாதத்தின்போது தில்லி உயா்நீதிமன்றத்தில் போலீஸாா் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பான வழக்கு, உயா்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம். சிங் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘போலீஸாா் தாக்கல் செய்த நிலவர அறிக்கையின் அடிப்படையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதை உறுதி செய்யும் வகையில் ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றிகரமான ஏலதாரருக்கு ஆா்டா் அளிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரத்தை கருத்தில் கொண்டு, இந்த மனுவில் மேலும் உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கத் தேவையில்லை. இதனால், இந்த விவகாரத்தில் உள்ள விசாரணை முடித்துவைக்கப்படுகிறது. சட்டத்தில் அவருக்குக் கிடைக்கும் தீா்வுகளைப் பெற மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.
முந்தைய நிலவர அறிக்கையில், ‘18 மாத சேமிப்புக் காலத்துடன்கூடிய சிசிடிவி கேமராக்களை நிறுவுமாறு உச்சநீதிமன்றம் டிசம்பா் 2020-இல் அளித்த தீா்ப்பிற்குப் பிறகு, இந்த விஷயத்தை விரைவாக ஆய்வு செய்ய மூத்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவை காவல்துறை ஆணையா் அமைத்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி காவல் நிலையங்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்த வழிகாட்டுதல்களை ஒரு மாதத்திற்குள் கடைப்பிடிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த உத்தரவைப் பின்பற்றாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக, மனுதாரா் சந்திரில் தபஸ் தரப்பில் வழக்குரைஞா் மனன் அகா்வால் மூலம் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது: ஜூன் 2021-இல், கரோனா நோய்த் தொற்றின் போது நடமாட்டத்திற்காக வழங்கப்பட்ட இ-பாஸ் என்னிடம் இல்லாமல் இருந்ததைக் கண்டு சில காவல்துறை அதிகாரிகள் என்னை துன்புறுத்தினா். அச்சுறுத்தவும் செய்தனா். இ-பாஸ் வழங்குவதற்கான ஆவணங்களைப் பெறுவதற்காக நான் எனது பணியிடத்திற்குச் செல்வதாக காவல் துறையிடம் விளக்கினேன். ஆனால், என்னை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சில காகிதங்களில் கையெழுத்திடச் செய்தனா்.
இந்த விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகி, சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க உத்தரவிடக் கோரினேன். அதற்கு 18 நாள்களுக்கு மட்டுமே சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க முடியும் என்பதால் சம்பந்தப்பட்ட காட்சிப் பதிவு பாதுகாக்க முடியாமல் போனதாக போலீஸாா் நீதிமன்றத்தில் தெரிவித்தனா். மேலும், காவல் நிலையத்தின் திறந்தவெளியை படம்பிடிக்கும் கேமராவும் செயல்படவில்லை. அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை குறைந்தபட்சம் 18 மாதங்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை இது மீறுவதாக உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.