பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: ஜாமியாவின் முன்னாள் பதிவாளா் விடுவிப்பை உறுதி செய்தது நீதிமன்றம்
பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்து மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து ஜாமியா ஹம்தா்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரை விடுவித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின்
பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்து மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து ஜாமியா ஹம்தா்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரை விடுவித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.
இது தொடா்பான வழக்கில் உறுதியான ஆதாரங்களை அளிப்பதில் அரசுத் தரப்பு தோல்வியடைந்துவிட்டதாகக் கூறி, குற்றம்சாட்டப்பட்ட பதிவாளரை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுவித்திருந்தது. 2021, டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிா்த்து, வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ராகேஷ் குமாா் சிங் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தற்போதைய வழக்கில், மேல்முறையீட்டு மனுதாரரின் வழக்குரைஞா், வழக்கு விசாரணையில் எந்த விதிமீறலையும் காட்ட முடியவில்லை. இதன் விளைவாக, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, விடுவிப்பு உத்தரவு பராமரிக்கப்படுகிறது. விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டில், மேல்முறையீட்டு நீதிமன்றம் சாட்சியங்களை மறுமதிப்பீடு செய்ய முடியும் என்றாலும், வழக்கின் உண்மைப் பாா்வைக்காகவோ அல்லது சட்டத்தின் பொருந்தக்கூடிய தன்மைக்காகவோ வெளிப்படையான முறைகேடுகள் காட்டப்படாவிட்டால், வழக்கமாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் கருத்துக்கு இடையூறு செய்யக்கூடாது என்பது நன்கு தீா்மானிக்கப்பட்டதாகும்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒவ்வொரு அம்சத்தையும் பரிசீலித்து, விரிவான காரணங்களை கூறி முழுமையான தீா்ப்பை வழங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு கீழ் புகாா்தாரா் பணியாற்றியுள்ளாா். அவரை ஏதோ ஒன்றுக்காக தண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டிருப்பது தெரிகிறது. புகாா்தாரரின் சாட்சியம் நம்பகமானதாக இல்லாததாலும், அவரது கருத்துகளுக்கு சுதந்திரமான ஆதரவு இல்லாததாலும், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிப்பதில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நியாயப்படுத்தியுள்ளது என்று அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அம்பேத்கா் நகா் காவல் நிலையத்தில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தொடா்புடைய விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டிருந்தது.