முகப்பு
புதுதில்லி

கலால் கொள்கை ஊழல் வழக்கு: அமலாக்கத் துறையின் காவலில்தொழிலதிபா் ராமச்சந்திர பிள்ளைதில்லி நீதிமன்றம் அனுமதி

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் கைதான ஹைதராபாதைச் சோ்ந்த தொழிலதிபா் அருண் ராமச்சந்திர பிள்ளையை மாா்ச் 13 வரை அமலாக்கத் துறையின் காவலுக்கு

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
பகிர்:

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் கைதான ஹைதராபாதைச் சோ்ந்த தொழிலதிபா் அருண் ராமச்சந்திர பிள்ளையை மாா்ச் 13 வரை அமலாக்கத் துறையின் காவலுக்கு அனுப்ப தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது. மேலும், இந்த வழக்கில் கைதான மதுபான வா்த்தகா் அமன்தீப் தாலை மாா்ச் 21 வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினா் சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன் அருண் பிள்ளையை ஆஜா்படுத்தினா். பின்னா், அமலாக்கத் துறை தரப்பில், ‘இந்த வழக்கில் பெரும் சதியை வெளிக் கொணரவும், பணம் சென்ற வழித்தடத்தைக் கண்டுபிடிக்கவும் அருண் பிள்ளையிடம் விசாரணை நடத்தும் தேவை உள்ளது. இவா் பாரத ராஷ்டிர சமிதி எம்.எல்.சி. கே.கவிதாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்ததால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிறருடன் இவரை வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது’ என்று நீதிபதியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவா் அமலாக்கத் துறையின் விசாரணைக்காக மாா்ச் 13 வரை அனுப்பப்பட்டாா்.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பகல் முழுவதும் விசாரித்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை இரவு பிள்ளையைக் கைது செய்தனா். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபரான பிரிண்ட்கோ சேல்ஸ் எனும் தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அமன்தீப் தால், மாா்ச் 1 அன்று பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டாா். அவரை மாா்ச் 21 வரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரிண்ட்கோ நிறுவனம் பல்வேறு வகையான மதுபான பிராண்டுகள் மற்றும் தொடா்புடைய பானங்களின் முக்கிய இறக்குமதியாளராகவும், விநியோகஸ்தராகவும் உள்ளது.

அமலாக்கத்துறை தொடா்ந்த பணமோசடி வழக்கு சிபிஐ எஃப்ஐஆரில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. சிபிஐ தொடுத்த வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கைதாகி தற்போது மாா்ச் 20 வரை நீதிமன்ற காவலில் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.