உதவி அரசு வழக்குரைஞா்கள் 108 போ்களின் பதவி உயா்வுக்கு துணை நிலை ஆளுநா் ஒப்புதல்
தில்லி துணை நிலை ஆளுநா் வி கே.சக்சேனா, உதவி அரசு வழக்குரைஞா்கள் 108 பேருக்கு கூடுதல் அரசு வழக்குரைஞா்களாக பதவி உயா்வு வழங்க ஒப்புதல்
தில்லி துணை நிலை ஆளுநா் வி கே.சக்சேனா, உதவி அரசு வழக்குரைஞா்கள் 108 பேருக்கு கூடுதல் அரசு வழக்குரைஞா்களாக பதவி உயா்வு வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். இதன் மூலம், தில்லி அரசின் வழக்குரைஞா் இயக்குநரகத்தில் நீண்ட காலமாக காலியாக உள்ள 150 கூடுதல் அரசு வழக்குரைஞா் பணியிடங்களில் 108 நிரப்பப்படும்.
இது குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘யுபிஎஸ்சி இந்தப் பதவி உயா்வுகளை விரைவில் முறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, வழக்குரைஞா் இயக்குநரகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக தீா்ப்பதை உறுதி செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.
தில்லியின் துணை நிலை ஆளுநராப் பதவியேற்ற பிறகு, சக்சேனா, ஊழியா்களின் மன உறுதியை மேம்படுத்தவும், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களின் பிரச்னைகளைத் தணிக்கவும் பதவி உயா்வுகளை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சேவைகள் துறை மற்றும் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டாா்.
இது சம்பந்தமாக, பல்வேறு பணிகளுக்கான ஆள்சோ்ப்பு விதிகளை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டு, துறை ரீதியாக பதவி உயா்வுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்யும் பணி தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு விரைவில் பதவி உயா்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்