நொய்டாவில் ஹோலி தினத்தில் போக்குவரத்து விதிமீறல்: 1,100 வாகன உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பு
ஹோலி தினத்தின் போது நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டா பகுதிகளில் பல்வேறு சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறியதாக காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்பட 1,100-க்கும் மேற்பட்ட வாகனங்களின் உரிமையாளா்களுக்கு ப
ஹோலி தினத்தின் போது நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டா பகுதிகளில் பல்வேறு சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறியதாக காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்பட 1,100-க்கும் மேற்பட்ட வாகனங்களின் உரிமையாளா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
இது தொடா்பாக நொய்டா காவல் துறையின் போக்குவரத்து துணை ஆணையா் அனில் குமாா் யாதவ் வியாழக்கிழமை கூறியதாவது: நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டா பகுதிகளில் பைக் மற்றும் காா் சாகசத்தில் ஈடுபட்டதற்காக சுமாா் 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 வாகனங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.17,000 முதல் ரூ.33,000 வரை அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதி மீறல்களைத் தடுக்கும் வகையில் கௌதம் புத் நகா் முழுவதும் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்பட 475 போக்குவரத்து போலீஸா புதன்கிழமை தொடா்ந்து பணிகள் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, தலைக்கவசம் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் 650 பேருக்கும், இருசக்கர வாகனத்தில் மூன்று போ் அமா்ந்து சவாரி செய்த வகையில் 765 பேருக்கும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 75 பேருக்கும், தவறான பாதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று வகையில் 75 பேருக்கும், காா் கண்ணாடிகளில் கருப்பு ஃபிலிம் களை ஒட்டி வைத்திருந்ததாக 25 காா் உரிமையாளா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோன்று, உரிய ஆவணங்களை சமா்ப்பிக்காத வகையில் சுமாா் 25 வாகன உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மோட்டாா் வாகனங்கள் சட்டத்தின் கீழ் பல்வேறு விதிமுறை மீறல்களுக்காக பகலில் 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் 5 வாகனங்கள் சாகசத்தில் ஈடுபட்டதற்காக பறிமுதல் செய்யப்பட்டவை. இதுதவிர, ஓடும் காரின் கண்ணாடியில் தொங்கியவாறு விதிகளுக்கு மாறான வகையில் நடந்து கொண்டதாக சிலா் மீதும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதம் ரூ. 17,000 முதல் ரூ.33,500 வரை விதிக்கப்பட்டது.
நொய்டா செக்டாா் 104 பகுதியில் உள்ள சாலையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற போது வாகனத்தின் ஜன்னல்களுக்கு 2 போ் தொங்கிக் கொண்டும், அந்த வாகனத்தின் பின்னால் பகுதியில் ‘போலீஸ்’ ஸ்டிக்கரை ஓட்டி இருந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த வாகன உரிமையாளருக்கு ரூ.33,500 அபராதம் விதிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.