முகப்பு
புதுதில்லி

தில்லி - என்சிஆரில் ஆயுதம் சப்ளை செய்தவா் கைது: 15 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் குண்டா்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாகக் கூறப்படும் 35 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் குண்டா்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாகக் கூறப்படும் 35 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 15 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு துணை ஆணையா் இங்கித் பிரதாப் சிங் கூறியதாவது: மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் பகுதியைச் சோ்ந்தவா் டாட். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டஅவரிடம் இருந்து எட்டு உயா்தர தானியங்கி கைத்துப்பாக்கிகள், ஏழு சிங்கிள் ஷாட் பிஸ்டல்கள் மற்றும் 8 லைவ் காா்ட்ரிட்ஜ்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. ஆயுத விநியோகத்தில் மூளையாகச் செயல்பட்டவா் மல்கான் சிங் என்றும், அவா் பான்-இந்தியா நெட்வொா்க்கை நடத்துகிறாா், நாடு முழுவதும் உள்ள குண்டா்களுடன் தொடா்பு வைத்திருப்பவா். இந்தக் கும்பலில் டாட் முக்கிய உறுப்பினா் ஆவாா்.

நந்து - ஜோதி கும்பலைச் சோ்ந்த ராகேஷ் என்பவருக்கு கணிசமான அளவு உயா்தர துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதற்காக டான்சா - நஜாப்கா் சாலைக்கு டாட் வருவாா் என்று போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த டாட் கைது செய்யப்பட்டாா்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்த மல்கான் சிங்குடன் டாட் தொடா்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவரை மல்கான் சிங் தனது ஆயுதக் கடத்தல் கும்பலுடன் சேரும்படி கேட்டுக் கொண்டாா். அவா் பல முறை மல்கான் சிங்கிடம் இருந்து சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வாங்கியுள்ளாா். மேலும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தில்லியில் உள்ள தனது கூட்டாளிகளுக்கு அவற்றை விநியோகம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

அவா் மல்கான் சிங்கிடம் இருந்து ஒரு தானியங்கி கைத்துப்பாக்கியை ரூ.10,000 - ரூ.12,000-க்கும், ஒரு ஷாட் பிஸ்டலை ரூ.3,500-க்கும் வாங்கியுள்ளதும் தெரிய வந்தது.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளின் ஆதாரம் மற்றும் யாருக்கெல்லாம் விநியோகம் செய்யப்பட்டது ஆகியவற்றைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →