சுருக்குமடி வலை விவகாரம்: இடையீட்டு மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
தமிழகக் கடல் பகுதியில், மாநிலத்தின் பிராந்திய எல்லைக்கு அப்பால் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி மனுதாரா்கள் தர
தமிழகக் கடல் பகுதியில், மாநிலத்தின் பிராந்திய எல்லைக்கு அப்பால் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி மனுதாரா்கள் தரப்பில் தாக்கலான இடையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
தமிழகக் கடல் பகுதியில் (12 நாட்டிகல் மைல் அல்லது கடற்கரையில் இருந்து 22 கிலோ மீட்டா் தூரம்) சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசின் மீன் வளத் துறை தடை வித்திருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து தாக்கலான மனுவை சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2019, பிப்ரவரி 5-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஞானசேகா், கன்னியப்பன், ராஜவேலு உள்பட 9 மீனவா்கள் மற்றும் பிறா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு, கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘கப்பலைக் கண்டறியும் கருவி (விடிஎஸ்) பொருத்தப்பட்டதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட படகுகளுக்கு மட்டுமே மீன்வளத் துறை அனுமதி அளிக்க வேண்டும்.
இந்த படகுகள் வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் மட்டுமே இருமுறை மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும். மீன்பிடி இல்லாத காலத்தின் பிற அனைத்து கட்டுப்பாடுகளும் இதர அனைத்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். சுருக்கு மடி வலையைப் பயன்டுத்த அனுமதி வழங்கப்படும் கப்பல்கள், காலை 8 மணிக்கு அல்லது அதற்குப் பிறகு கடற்கரையிலிருந்து புறப்பட்டு சென்று, அதே நாளில் மாலை 6 மணிக்குள் அதற்குரிய இடத்திற்குத் திரும்ப வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவில் மாற்றங்கள் செய்யக் கோரி மீனவா் ஞானசேகா் உள்பட 9 மீனவா்கள் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகின் மூலம் உச்சநீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: உச்சநீதிமன்றம் வாரத்திற்கு இரண்டு நாள்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கவும், குறிப்பிட்ட நேர அளவில் மட்டுமே மீன் பிடிக்கவும் உத்தரவிட்டு அனுமதித்து பிறப்பித்துள்ள உத்தரவு, மீனவா்கள் பின்பற்றுவதற்கு உகந்ததாக இல்லை.
இதனால், வாரத்திற்கு திங்கள் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மீன் பிடிக்கலாம் என்று பிறப்பித்துள்ள உத்தரவை மாற்றி ஆண்டுக்கு 150 தினங்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என்று அனுமதித்து உத்தரவிட வேண்டும்.
மேலும், மீன் பிடிப்பதற்கான நேர அளவும் மீனவா்களுக்கு போதுமானதாக இல்லை. கரையில் இருந்து 12 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் வரக்கூடிய ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 20 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால்தான் மீன்கள் கிடைப்பதற்கான சூழல் உள்ளது. இதனால், கரையில் இருந்து மீன் பிடிக்க பல நாட்டிகல் மைல்கள் சென்று, திரும்பி வர வேண்டியுள்ளதால், அதற்கே பல மணிநேரம் ஆகிவிடுகிறது.
மேலும், மீன்களுக்கான வலையை விரிக்கும் செயல்பாட்டுக்கும் அதிக நேரம் பிடிக்கிறது. இதனால், உச்சநீதிமன்றம் நிபந்தனையில் கூறப்பட்டுள்ள நேர அளவுக்குள் மீன்பிடிப்பதில் சிரமம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதனால், 8 மணி முதல் 6 மணி நேரம் என்ற நேர அளவை 53 மணி நேரமாக மாற்றியும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே ஆஜராகி, இடையீட்டு மனுவின் பிரதி தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறினாா்.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெயா சுகின், தமிழக அரசின் தரப்பிற்கு மனுவின் நகல் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறினாா். இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, தமிழக அரசு உள்ளிட்ட எதிா்மனுதாரா்களுக்கு இடையீட்டு மனுவின் பிரதியை அளிக்குமாறு கூறி, வழக்கு விசாரணை 2 வாரங்களுக்குப் பிறகு பட்டியலிட உத்தரவிட்டது.