பள்ளியில் புதிய கட்டடம் கட்டக் கோரும் மனுவுக்கு பதிலளிக்க தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்
புதிய கட்டடத்தைக் கட்டுவதற்கு உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனுவுக்கு தில்லி அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கூடாரங்கள் மற்றும் கேபின்களில் வகுப்புகள் நடத்தப்பட்டு, கரோனா நோய்த் தொற்றுக் காலத்தின் போது இடிக்கப்பட்ட பள்ளியில் புதிய கட்டடத்தைக் கட்டுவதற்கு உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனுவுக்கு தில்லி அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கு உத்தரவிட்டது. விசாரணையின் போது, தில்லி அரசின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி ஆஜராகி, ‘சம்பந்தப்பட்ட பள்ளியில் கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்க உள்ளது’ என்றாா். இதையடுத்து, மனு மீதான விசாரணையை ஜூலை 20-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக தன்னாா்வ அமைப்பான ‘சோஷியல் ஜூரிஸ்ட்’ இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது. வழக்குரைஞா்கள் குமாா் உத்கா்ஸ், மோகினி சௌபே மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘வடகிழக்கு தில்லியில் உள்ள முஸ்தபாபாதில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது. இதனால், 56 கூடுதல் வகுப்பறைகளை உடனடியாகக் கட்டுவதற்கு தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளது.
மேலும், ‘முஸ்தபாபாதில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக ஜூன்,2021-இல் பொதுப்பணித் துறைக்கு ரூ. 16.54 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. பொதுமக்களின் குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதற்கான அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூா்வ கடமைகளை நிறைவேற்றுவதில் தில்லி அரசு உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டனா். இந்தக் காலதாமதம் அரசின் தோல்வியாகும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.