தில்லியில் கோடை கால தூசி மாசுவைக் கட்டுப்படுத்த அரசு தீவிரம்: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு
தேசிய தலைநகா் தில்லியில் குளிா்கால காற்று மாசுவைப் போன்று கோடை காலங்களில் காற்றில் எற்படும் தூசி மாசுவைக் கட்டுப்படுத்த 14 வகையான விவகாரங்களில் தீவிரமாக கவனம் செலுத்துப்படும் என தில்லி முதல்வா் அரவிந்
தேசிய தலைநகா் தில்லியில் குளிா்கால காற்று மாசுவைப் போன்று கோடை காலங்களில் காற்றில் எற்படும் தூசி மாசுவைக் கட்டுப்படுத்த 14 வகையான விவகாரங்களில் தீவிரமாக கவனம் செலுத்துப்படும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
நிகழ் கோடை மாதங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கான செயல் திட்டத்தையும் தில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் முன்னனியில் அவா் தொடங்கிவைத்தாா்.
பின்னா், இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது வருமாறு: குளிா்கால மாதங்களில் காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கான செயல் திட்டத்தை தில்லி அரசு ஏற்கெனவே கொண்டுள்ளது. குப்பைகளை எரித்தல், வேளாண் கழிவுகள் எரித்தல், பட்டாசு மாசுபாடு, தொழிற்சாலை மற்றும் வாகன உமிழ்வு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக காற்றுத் தரக் குறியீட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தில்லி அரசு எடுத்த முயற்சிகள் நாடாளுமன்றக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
2016 -ஆம் ஆண்டில், காற்றின் தரக்குறியீடு ‘கடுமையான’ பிரிவில் 26 நாள்கள் இருந்தன. ஆனால், இது 2022-23-இல் 6 நாள்களாக குறைந்துள்ளது. 2016-இல் ‘மிகவும் மோசம்’ மற்றும் ‘கடுமையான’ பிரிவில்’ 124 நாள்கள் இருந்தன. 2022-23 ஆண்டில் இது 72 நாள்களாகக் குறைக்கப்பட்டது. இதே போன்று 2016-இல் திருப்தியான, மிதமான பிரிவுகளில் 109 நாள்கள் இருந்தது.
இது 2022-23-இல் 163 நாள்களாக அதிகரித்துள்ளது. இருப்பினும்,காற்றின் தரத்தை மேலும் மேம்படுத்துவதே தில்லி அரசின் நோக்கமாகும். குறிப்பாக கடந்த ஆண்டு ‘டுமையான’ பிரிவில் இருந்த 6 நாள் மற்றும் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்த 66 நாள் போன்று இல்லாமல் எதிா்காலத்தில் காற்றின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
தற்போது கோடைகால செயல் திட்டத்தின் முதன்மை கவனம் தூசி மாசுபாடு ஆகும். இது நகரின் மோசமான காற்றின் தரத்திற்கு முக்கியப் பங்களிப்பாக உள்ளது. இதை தடுக்க 14 வகை திட்டத்தில் 30 அரசுத் துறைகள் பங்கேற்கின்றன. தூசி மாசுவை சமாளிக்க, 84 இயந்திர சாலை துப்புரவு இயந்திரங்கள், 609 தண்ணீா் தெளிப்பான்கள், 185 நடமாடும் புகை எதிா்ப்பு துப்பாக்கிகளை அரசு வாங்கியுள்ளது.
மேலும், 70 ஒருங்கிணைந்த சாலை துப்புரவு இயந்திரங்கள் மற்றும் 250 ஒருங்கிணைந்த தண்ணீா் தெளிப்பான்கள் வாங்கப்பட்டு வருகின்றன. தூசி மாசுபாடு, குப்பைகளை திறந்தவெளியில் எரித்தல், தொழிற்சாலை பகுதிகளில் கழிவுகளை கொட்டுதல் ஆகியவற்றை சரிபாா்க்க ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகரத்தில் தூசி மாசுபடுவதைக் கண்காணிக்க அரசு பகல், இரவு முறையே 225 மற்றும் 159 குழுக்களை ஈடுபடுத்தும்.
தூசி மாசுவை அறிய அதிகம் பாதிக்கப்படும் 13 காற்று மாசு இடங்களில் நிகழ்நேர மூலப் பகிா்வு ஆய்வுகள் நடத்தப்படும். இந்த இடங்களில் நடமாடும் ஆய்வுக் கூடங்களும் பயன்படுத்தப்படும். காற்று மாசுபாட்டுக்கு காரணமான வாகனங்கள், தூசி, பயோமாஸ் (உயிரி) எரித்தல், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் உமிழ்வுகள் போன்றவை அதிகரிப்பதற்கான காரணிகளை அறிய இந்த நிகழ்நேர மூலப் பகிா்வு ஆய்வுகள் உதவுகின்றன.
கோடைகால செயல் திட்டத்தின்படி, 500 சதுர மீட்டருக்கும் அதிகமான கட்டுமானத் தளங்கள் தூசி மாசுபாடு உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும். குப்பைக் கிடங்குகளில் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க அரசு நிலையான செயல்பாட்டு நடைமுறையை தயாரித்துள்ளது. தொழிற்சாலை கழிவுகளை அறிவியல் பூா்வமாக அகற்றுவதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தில்லியின் பசுமைப் பரப்பை அதிகரிக்க, அரசு நிகழாண்டில் 52 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிா்ணயித்துள்ளது. கோடை காலத்தில் குறைந்தது 42 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். கூடுதலாக 4 லட்சம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இடம் மாற்றப்பட்ட மரங்களின் உயிா் பெரும் விகிதத்தை மேம்படுத்த சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. தில்லியின் காற்று மாசுபாடு நிலைமை மேம்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளில் அது மோசமடைந்து வருவது கவலையளிக்கிறது.
தில்லியில் 2016-2022-க்கு இடையே காற்று மாசுபாடு 30 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், கடுமையான காற்றின் தர நாள்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) ஆகியவற்றுடன் இணைந்து நகரத்தில் உள்ள பூங்காக்களுக்கு புத்துயிா் அளிக்க தில்லி அரசு செயல்பட்டு வருகிறது. தில்லியில் சுமாா் 3,500 பூங்காக்கள் அரை ஏக்கருக்கு மேல் உள்ளன. இவை நிகழாண்டு டிசம்பருக்குள் அழகுபடுத்தப்படும். எம்சிடியின் கீழ் மொத்தம் 17,000 பூங்காக்கள் உள்ளன.
இவை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் அழகுபடுத்தப்படும். மின்னணு கழிவுகளை திறம்பட நிா்வகிப்பதற்கு நாட்டிலேயே முதன்முறையாக ‘ஹோலம்பி கலனில்’ மின்னணு கழிவு சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்படுகிறது என தில்லி முதல்வா் தெரிவித்தாா்.