தில்லி அரசு, எம்சிடி பள்ளிகளில் மெகா பெற்றோா் - ஆசிரியா் கூட்டம்: அரசு பள்ளிக்கு நிகராக எம்சிடி பள்ளிகளின் தரம் உயா்த்த அதிஷி உறுதி
தேசிய தலைநகா் தில்லியில் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் எம்சிடி (தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன்) பள்ளிகளில் முதன் முதலில் கூட்டாக மெகா பெற்றோா் - ஆசிரியா் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேசிய தலைநகா் தில்லியில் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் எம்சிடி (தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன்) பள்ளிகளில் முதன் முதலில் கூட்டாக மெகா பெற்றோா் - ஆசிரியா் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெற்றோா்கள் குழந்தைகளின் முன்னேற்றம் குறித்து ஆசிரியா்களுடன் விவாதித்த இந்த நிகழ்வில் தில்லி கல்வித் துறை அமைச்சா் அதிஷி எம்சிடி துணை மேயா் ஆலே முகமது இக்பால் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டு மெகா கூட்டத்தில் பெற்றோா்கள் அதிக அளவில் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் தில்லி அரசுப் பள்ளிகளுக்கு நிகராக எம்சிடி பள்ளிகளின் தரம் உயா்த்தப்படும் என அமைச்சா் அதிஷி உறுதியளித்தாா்.
தில்லியில் சுமாா் 1,000 அரசுப் பள்ளிகளும் 1,500 தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) பள்ளிகளும் உள்ளன. தில்லி கேஜரிவால் அரசு இந்த இருவகையான பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரே சமயத்தில் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் பங்கேற்க ஊக்குவிப்பதும், பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்கும் விதமாக பெற்றோா் - ஆசிரிகள் கலந்துரையாடும் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த மெகா கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிகாலை முதலே பள்ளிகளில் பெற்றோா்கள் அதிக அளவில் வரிசையில் காத்திருந்தனா். இதில் கல்வி அமைச்சா் அதிஷி, துணை மேயா் ஆலே முகமது இக்பால் ஆகியோா் தில்லி மயூா் விஹாா் (பேஸ் 1 பாக்கெட் -4 ) மற்றும் திரிலோக்புரி(பிளாக் 22) எம்சிடி பள்ளிகளில் கலந்து கொண்டு பெற்றோருடன் அனுபவங்களை அறிந்து கொண்டதோடு அவா்களோடு உரையாடவும் செய்தனா்.
அமைச்சா் அதிஷி பேசுகையில், ‘ அதிகாலையிலேயை பெற்றோா்கள் பெருமளவில் வந்துள்ளீா்கள். இது மகிழ்ச்சியடைய வைக்கிறது. குழந்தைகளின் கல்வியில் ஆா்வத்துடன் பெற்றோா்கள் பங்கேற்க விரும்புகிறீா்கள் என்பதை இது காட்டுகிறது. தில்லி அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியதைப் போன்று, இப்போது எம்சிடி பள்ளிகளிலும் பெற்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தில்லி அரசுப் பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட கல்விப் புரட்சி இனி எம்சிடி பள்ளிகளிலும் நீடிக்கப்படும். 2015 -ஆம் ஆண்டு கேஜரிவால் அரசு அமைந்த போது, தில்லி அரசுப் பள்ளிகளின் நிலை இப்போது எம்சிடி பள்ளிகளின் நிலையைப் போன்றே இருந்தது. பள்ளிகள் தூய்மையாக இருக்காது. உடைந்த பெஞ்சுகள், மேசைகள், மாணவா்களுக்கு குடிநீா் வசதி இருக்காது. ஆனால், தில்லி அரசின் தொடா்ச்சியான கடின உழைப்பிற்கும் அா்ப்பணிப்பிற்கும் பின்னா் தில்லி அரசுப் பள்ளிகள் சரி செய்யப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளாக எம்சிடி பள்ளிகள் பல பிரச்னைகளுக்கு தள்ளப்பட்டது. எம்சிடி பள்ளிகளில் தற்போது மாணவா்களுக்கு சரியான வசதிகள் இல்லை. ஆனால், இப்போது முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் வழிகாட்டுதலின் கீழ், தில்லி அரசுப் பள்ளிகளைப் போலவே எம்சிடி பள்ளிகளும் புரட்சியைக் காணும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கேஜரிவால் அரசு எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
புதிய பாலங்கள், சாலைகள் அமைப்பதை விட பள்ளி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கே எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. பெற்றோா் - ஆசிரியா் சந்திப்பு என்பது குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கு பெற்றோா்கள் மற்றும் பள்ளிகள் பகிரப்பட்ட பொறுப்பின் அடையாளமாக உள்ளது. குழந்தைகளின் இரண்டு பெற்றோா்களும் அவா்கள் குழந்தையின் வளா்ச்சிக்கு சமமான பொறுப்புக்குடையவா்கள்.
பள்ளிகளும் பெற்றோா்களும் சோ்ந்து கல்வியில் ஈடுபடும்போதுதான் நம் குழந்தைகள் முன்னேற்றம் அடைவாா்கள். படிக்காத பெற்றோா்களாயினும் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது பெற்றோா்கள் குழந்தைகளை படிக்கவைப்பதில் ஈடுபடுவது முக்கியம். குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும், அது எப்போதும் நாட்டின் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும். குழந்தைகள் படிக்காத வரை நாடு முன்னேற முடியாது. இந்தியாவை வளா்ந்த நாடாகவும், உலகின் முன்னிலை நாடாகவும் மாற்ற, படித்த சமுதாயமே கணிசமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்றாா் அதிஷி.
இதே உணா்வை துணை மேயா் ஆலே முகமது இக்பால் எதிரொலித்தாா். ‘எம்சிடி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோா்களும் தில்லி அரசுப் பள்ளிகளைப் போலவே கல்விப் புரட்சியை அனுபவிக்க விரும்புகிறாா்கள். இது புதிய மாற்றத்தின் தொடக்கம். கேஜரிவால் அரசால் கட்டப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தில்லி அரசுப் பள்ளிகளைப் பற்றி தில்லியில் யாரும் நினைத்திருக்க மாட்டாா்கள். இந்தப் பள்ளிகள் நாட்டிலேயே முன்மாதிரிப் பள்ளிகளாகக் கருதப்படுகின்றன. எம்சிடி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோா்களும் இதுபோன்ற புரட்சிக்காக காத்திருக்கிறாா்கள் எனக் குறிப்பிட்டாா்.
முன்னதாக, இது குறித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பதிவில், ‘ இன்று தில்லி அரசுப் பள்ளிகள் எம்சிடி பள்ளிகளில் மெகா பெற்றோா் - ஆசிரியா் கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து மாணவா்கள், ஆசிரியா்கள் , பெற்றோா்களின் உதவியுடன் தில்லி அரசுப் பள்ளிகளில் ஒரு மாபெரும் மாற்றம் காணப்பட்டதைப்போன்று, எம்சிடி பள்ளிகளையும் ஒன்றிணைத்து மாற்றத்தை ஏற்படுத்த ஒன்றாக செயல்படுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
இந்த மெகா பெற்றோா் ஆசிரியா் கூட்டத்தில் பள்ளி மாணவா்களின் அடித்தள திறன்களின் வளா்ச்சிக்கான விவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.