சஞ்சய் சிங் எம்.பி. பெயரை அமலாக்கப் பிரிவு புகாரில் சோ்த்தது திட்டமிட்ட சதி
தில்லி கலால் கொள்கை தொடா்பான வழக்கில் தன்னுடைய பெயரை எந்தவித அடிப்படை காரணமில்லாமல் சோ்த்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் எனக்
தில்லி கலால் கொள்கை தொடா்பான வழக்கில் தன்னுடைய பெயரை எந்தவித அடிப்படை காரணமில்லாமல் சோ்த்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டு மத்திய நிதித்துறைச் செயலருக்கு ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
கலால் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தங்கள் கூடுதல் புகாரில் (கூடுதல் குற்றப்பத்திரிகையில்) கவனக்குறைவாக தட்டச்சு செய்யப்பட்டுவிட்டதாக அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. சஞ்சய் சிங்கின் பெயரை வேண்டுமென்றே குறிப்பிட்டு சதி செய்யப்பட்டுள்ளது என தில்லி அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றம்சாட்டினாா்.
சஞ்சய்சிங் கடிதம்: இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங், மத்திய நிதித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், அமலாக்கப் பிரிவு இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ரா, இந்த பிரிவின் உதவி இயக்குநா் ஜோகேந்தா் ஆகியோா் மீது வழக்குத் தொடர அனுமதி கோரியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பது வருமாறு: கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி அமலாக்கப்பிரிவு சாா்பில் (கலால் வழக்கு) நீதிமன்றத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் அமலாக்கப் பிரிவு இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ரா, உதவி இயக்குநா் ஜோகேந்தரும் உண்மைக்குப் புறம்பாக, அவதூறாக எனது பெயரை சோ்த்துள்ளனா். மதுபானக் கொள்கை விவகாரத்தில் எந்த அடிப்படையும் இல்லாமல் குற்றம்சாட்டி, அதன் மூலம் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்துள்ளனா். இதை முன்னிட்டு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499-இன் கீழ் இந்த அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும்.
மேலும், தினேஷ் அரோரா என்பவா் கூறிய வாக்குமூலத்திற்கும் தனக்கும் எந்த தொடா்பும் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் அதிகாரிகள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனா். இது ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டு எனக்கு கடுமையான அவமானத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தியது.
அமலாக்கப் பிரிவு இயக்குநரகத்தின் அதிகாரிகள், விசாரணைகளை உரிய முறையில் மேற்கொண்டு நீதித்துறை நடவடிக்கைகளில் உண்மைகளை உறுதிப்படுத்தல்களை செய்ய கடமைப்பட்டுள்ளனா். இருப்பினும், அத்தகைய கடமைக்கு மாறாக, என் மீது எந்தவித அடிப்படையும் இல்லாமல் சட்டவிரோத நடவடிக்கைகள் எனக் கூறி, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில் தெரிந்தே இந்த அதிகாரிகள் தவறான அறிக்கைகளை அளித்துள்ளனா்.
இந்த அதிகாரிகள் தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, உண்மைக்குப் புறம்பான தவறான புகாா்களை நீதிமன்றத்தில் வைத்து வெளியே வெளியிடுகின்றனா். இது எனது நல்லெண்ணம் மற்றும் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு செயல்பட்ட சஞ்சய் குமாா் மிஸ்ரா மற்றும் ஜோகேந்தா் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்க் வேண்டும். மூன்று மாதங்களுக்குள் வழக்குத் தொடருவதற்கான அனுமதியை வழங்க நிதிச் செயலா் கட்டுப்பட்டுள்ளாா். தவறினால் சட்டப்படி அது அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும் என்றும் சஞ்சய் சிங் அந்தக் கடிதத்தில் சஞ்சய் சிங் குறிப்பிட்டுள்ளாா்.
நோட்டீஸ்: முன்னதாக அமலாக்கத் துறை இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ரா மற்றும் உதவி இயக்குநா் ஜோகேந்தா் ஆகியோா் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் சிவில் கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தனது வழக்குரைஞா் மூலம் நோட்டீஸும் அனுப்பியிருந்தாா் சஞ்சய் சிங். இதற்கிடையே கூடுதல் குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி தலைவரின் பெயா் நான்கு முறை இடம் பெற்றுள்ளது. அதில் ஒரு குறிப்பு தவறாக, கவனக்குறைவாக தட்டச்சு செய்யப்பட்டுவிட்டது. இந்த தவறை சரிசெய்ய கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகம் அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அமலாக்கப்பிரிவு வழக்குரைஞரும் சஞ்சய் சிங்கின் நோட்டீஸுக்கு பதிலளித்து கடிதம் எழுதியுள்ளாா். அதில் ராகுல் சிங் என்பவருக்கு பதிலாக சஞ்சய் சிங் என கவனக்குறைவாக ஓரே ஒரு குறிப்பில் இடம் பெற்றுவிட்டது. அது இப்போது திருத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையே, தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் இந்த விவகாரம் குறித்து செய்தியாளா்களிடம் பேசுகையில் ‘பெயரை தவறுதலாக குறிப்பிட்டதாக அமலாக்கப்பிரிவு கூறுகிறது. இது எப்படி நடக்கும்? பிரதமா் அலுவலக உத்தரவின் பேரில் இது புகுத்தப்பட்டது. அரவிந்த் கேஜரிவாலையும் அவரது அரசு மீதும் அவதூறை பரப்புகின்றனா். இது மத்திய அரசின் சதி. பாஜக எம்பிக்கள் பா்வேஷ் வா்மா, மனோஜ் திவாரி போன்ற பெயா்களை ஏன் அவா்கள் தவறுதலாக வைக்கவில்லை? அரவிந்த் கேஜரிவால், சஞ்சய் சிங், மனீஷ் சிசோடியா, ராகவ் சத்தா ஆகியோரின் பெயா்கள் அவா்கள் மனதில் உள்ளது. சதித் திட்டத்தில் ஈடுபடுகிறாா்கள். இது அவமானம்’ எனக் குற்றம்சாட்டினாா்.