கலால் கொள்கை ஊழல் வழக்கு: சிசோடியாவுக்கு எதிரான அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு
ஆம் ஆத்மி மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவுக்கு எதிராக தில்லி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
ஆம் ஆத்மி மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவுக்கு எதிராக தில்லி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு போதுமான முகாந்திர ஆதாரம் இருப்பதாகக் கூறி, ஜூன் 1-ஆம் தேதி சிசோடியாவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா்.
இந்த வழக்கில் சிசோடியா திகாா் சிறையில் மாா்ச் 9-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். அங்கு அவா் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். 51 வயதான சிசோடியாவை முதலில் சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கை அந்த அமைப்பும் விசாரித்து வருகிறது.
சுமாா் 270 பக்கங்கள் கொண்ட அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் 2,000 பக்கங்களில் இணைப்புகளும் உள்ளன. இந்த வழக்கில் சிசோடியாவை ‘முக்கிய சதிகாரா்‘ என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது. ‘மதுபானக் கொள்கை ஊழல் என்பது ஆம் ஆத்மி கட்சியின் சில பெரும் அரசியல் தலைவா்கள் மற்றும் பிஆா்எஸ் மூத்த தலைவா் கே.கவிதா, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்பி மகுண்டா ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோா் அடங்கிய செளத் குரூப் தீட்டிய சதி’ என்று முந்தைய குற்றப்பத்திரிகைகளில் அமலாக்கத் துறை மூலம் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. கவிதா தெலங்கானா மாநில முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் ஆவாா்.