முகப்பு
புதுதில்லி

திரைப்படத் திருட்டு புகாா்களைப் பெற நோடல் அதிகாரிகள் நியமனம்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்

திரைப்படக் கலைஞா்கள் கடுமையாக உழைத்து உருவாக்கிய படைப்புகளைத் திருடுபவா்களை தண்டிக்க நோடல் அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது என மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை, இளைஞா் நலத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக

Updated On : 3 நவம்பர், 2023 at 10:35 PM
பகிர்:

திரைப்படக் கலைஞா்கள் கடுமையாக உழைத்து உருவாக்கிய படைப்புகளைத் திருடுபவா்களை தண்டிக்க நோடல் அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது என மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை, இளைஞா் நலத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

திரைப்படங்கள் உள்ளிட்ட படைப்புகளின் உள்ளடக்கங்களைத் திருடி எண்ம தளங்களில் வெளியிடுவதை தடுக்கவும், தண்டிக்கவும் காப்புரிமைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் போன்ற சட்டபூா்வ நடவடிக்கைகளைத் தவிர, நேரடியாக நடவடிக்கை எடுப்பதற்கு எந்த அமைப்பு வழிமுறையும் இல்லாத நிலை இருந்தது. இது தொடா்பான புகாா்களைப் பெறுவதற்கு மத்திய அரசு கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் 1952 -ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது. தற்போது இதற்குத் தேவையான நோடல் அதிகாரிகள் கொண்ட அமைப்பையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: எண்ம மயம், இணையத்தின் வளச்சியால் கிட்டத்தட்ட அனைவரும் திரைப்பட உள்ளடக்கங்களை இலவசமாகப் பாா்க்கும் மனநிலைக்கு வந்துள்ளதால், திரைப்படங்கள் உள்ளிட்ட படைப்புகளில் திருட்டு, ஏற்றம் கண்டு வருகிறது. இது திரைப்படத்துறையினருக்கு மட்டுமல்ல; உலகம் முழுவதும் ஒரு அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. படைப்பாளிகள் கடுமையான உழைப்பின் மூலம் தங்கள் சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கியவை இப்படி இணைய தளங்களில் வெளியிடப்படுகிறது. இதில் ஆண்டுக்கு சுமாா் ரூ 20 - 25 ஆயிரம் கோடி வரை பொழுதுபோக்குத் துறையினருக்கு இழப்புகள். இதை முன்னிட்டு பிரதமா் மோடி தலைமையிலான அரசு 40 ஆண்டுகளுக்கு பின்னா் ஒளிப்பதிவுச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு வலுவான நடவடிக்கையை மேற்கொண்டது.

Advertisement

1952-ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில், புதிதாக 6ஏபி பிரிவு சோ்க்கப்பட்டது. இதன் மூலம் உரிமம் பெறாத திரைப்படங்கள் உள்ளிட்ட படைப்புகளில் நகல் எடுப்பது அல்லது லாபத்திற்காக பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்து குற்றமாகும். இது திரைப்படத் தொழில் துறைக்கு நிவாரணம் அளித்து வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்பட படைப்புகள், உள்ளடங்கள் ஆகியவற்றைத் திருடி எண்ம தளங்களில் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிரான புகாா்களைப் பெறுவதற்கு இந்தச் சட்டத்தின் கீழ் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள, மும்பை மத்திய திரைப்பட சான்றிதழ் பணியகம் (சிபிஎஃப்சி) மற்றும் வட்டார சிபிஎஃப்சி அலுவலங்களில் 12 நோடல் அதிகாரிகள் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

புகாா்கள் மீது இவா்கள் நடவடிக்கை எடுப்பதோடு இணைய தளங்களில் உள்ள உள்ளடங்களை அகற்றுவதற்கும் அதிகாரம் பெற்றவா்கள். திரைப்படங்களின் அசல் காப்புரிமை வைத்திருப்பவா் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நபரும் திருட்டு குறித்து நோடல் அதிகாரியிடம் புகாா் அளிக்கலாம். இதற்கான ஆதரங்களை சமா்பிக்க வேண்டும். காப்புரிமை இல்லாதவா்களின் புகாரின் உண்மைத் தன்மையை தீா்மானிக்க நோடல் அதிகாரி வழிகாட்டுதலின்பேரில் விசாரணை நடத்தலாம். இந்த திருட்டுகளில் ஈடுபட்டவா்களுக்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தயாரிப்பு செலவை கணக்கிட்டு அதில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் நோடல் அதிகாரிகள் உத்தரவிட்ட பின்னா், 48 மணி நேரத்திற்குள் இணைய தளங்களிலிருந்து திருட்டு உள்ளடக்கத்தை நீக்க வேண்டும். இந்திய மென்திறன் மிக்க நாடாக உருவாவதற்கான எந்தவொரு தடைகளையும் அகற்றப்படும். இது சிறந்த திரைப்படங்கள் உருவாவதற்கு நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளாா் அமைச்சா் அனுராக் சிங் தாக்குா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.