முகப்பு
புதுதில்லி

காற்றை சுத்திகரிக்கும் ‘ஸ்மோக் டவா்’ செயல்படாமல் இருப்பதற்கு பாஜகதான் காரணம்: அமைச்சா் கோபால் ராய் குற்றச்சாட்டு

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் ‘ஸ்மோஃக் டவா்’ செயல்படாமல் உள்ளதற்கு பாஜக தான் காரணம் என்று நகர அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

Updated On : 5 நவம்பர், 2023 at 12:00 AM
பகிர்:

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் ‘ஸ்மோஃக் டவா்’ செயல்படாமல் உள்ளதற்கு பாஜக தான் காரணம் என்று நகர அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி நகரத்தில் காற்று மாசு துகள்களை குறைத்திடும் வகையில் பெரிய அளவில் காற்றை சுத்திகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புகள் ‘ஸ்மோக் டவா்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு

உச்சநீதிமன்ற உத்தரவின் படி கனாட் பிளேஸ் மற்றும் ஆனந்த் விஹாா் ஆகிய இரண்டு பகுதிகளில் தலா 22.9 கோடி ரூபாய் செலவில் இவை அமைக்கப்பட்டன. காற்று மாசு துகள்கள் தொடா்பான ஆய்வுகள் மற்றும் ஸ்மோக் டவருக்கான தொழில்நுட்ப உதவியை ஐஐடி-பாம்பே மற்றும் ஐஐடி- தில்லி வழங்கி வருகின்றன.

Advertisement

இந்நிலையில், தில்லி கனாட் பிளேஸில் உள்ள ‘ஸ்மோக் டவா்’ கடந்த 7 மாதங்களுக்கு மேலாக செயல்படாமல் இருப்பது குறித்து தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கூறியிருப்பதாவது:

அஸ்வனி குமாா் என்ற அதிகாரியை தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழுவின் தலைவராக அனைத்து மரபுகளையும் மீறி மத்திய அரசு நியமித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்திய அஸ்வினி குமாா் தில்லியில் காற்று மாசு தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வுக்கான செலவினங்களை நிறுத்தினாா். இதைத் தொடா்ந்து, ஆய்வுகளை மேற்கொண்ட முகமைகளும் தங்களது ஆய்வை நிறுத்தின. கனாட் பிளேஸ் பகுதியில் அமைக்கப்பட்ட ‘ஸ்மோக் டவரும்’ மூடப்பட்டது.

இது கடந்த 7 மாதங்களுக்கு மேலாக செயல்படாமல் இருப்பதற்கு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவும், பாஜகவும் தான் காரணம் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

கடுமையான பிரிவில் தில்லி காற்று மாசு அதிகரித்து வருவதற்கு அரவிந்த் கேஜரிவாலின் செயலற்ற தன்மையும், ஆம் ஆத்மி அரசும் தான் காரணம் என்று பாஜக தொடா்ந்து குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், காற்று மாசு அதிகரிப்பிற்கு பாஜக தான் காரணம் என்று அமைச்சா் கோபால் ராய் பதில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.