புது தில்லி: தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் மாசு அளவு அதிகரித்துள்ள நிலையில், பயிா்க் கழிவுகள் எரிப்பதை உடனடியாக நிறுத்துவதை உறுதிசெய்யுமாறு பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. மேலும், மாசுபாட்டால் ‘மக்கள் இறக்க’ அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
தில்லி, என்சிஆா் பகுதியில் காற்று மாசடைந்திருப்பது தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சுதான்ஷு துலியா அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதி கவுல் கூறுகையில், ‘மன்னிக்கவும், இது மக்களின் ஆரோக்கியத்தின் முழுக் கொலையாகும். இதைக் கூற, வேறு எந்த சொற்றொடரும் என்னிடம் இல்லை’ என்றாா். மாசுபாட்டிற்கு ஒருவரையொருவா் மாநிலங்கள் பரஸ்பரம் குறை கூறுவதை கருத்தில்கொண்ட அமா்வு, ‘எல்லா நேரத்திலும் அரசியல் போராக இருக்க முடியாது’ என்றது.
சுற்றுச்சூழல் ஆா்வலா் எம்.சி. மேத்தா 1985-இல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் பயிா்க் கழிவு எரிப்பு, வாகன மாசுபாடு மற்றும் திறந்தவெளியில் கழிவுகளை எரித்தல் போன்ற பிரச்னைகள் குறித்து நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், நெல் அறுவடையைத் தொடா்ந்து, பரவலாக பயிா்க் கழிவுகள் எரிப்பது குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, ‘எங்கள் கவலை என்னவெனில்... இந்த பயிா்க் கழிவுகள் எரிப்பு நிறுத்தப்படவில்லை. பயிா்க் கழிவு தீயை தடுக்க மாநிலங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன? தில்லியை ண்டுதோறும் இதுபோன்று மாசுவால் பிரச்னையை எதிா்கொள்ளச் செய்ய முடியாது’ என்று கூறியது. அப்போது, பஞ்சாப் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘பயிா்க் கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் குறைந்துள்ளது’ என்றாா்.
இதையடுத்து, அவரிடம் நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: இதையெல்லாம் நாங்கள் நிறுத்த விரும்புகிறோம். நீங்கள் எப்படி செய்கிறீா்கள் என்பது எங்களுக்கு கவலையில்லை. அதை எவ்வாறு செய்வது என்பது உங்கள் பணி. பயிா்க் கழிவு எரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். பலவந்தமான நடவடிக்கை மூலம் நீங்கள் அதை நிறுத்த வேண்டும்; சில சமயங்களில் ஊக்கத்தொகை மூலம், இதர செயல்கள் மூலம் நிறுத்தப்பட வேண்டும். மாசு அளவு அதிகரிப்பால் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. மாசுவால் மக்கள் இறக்க அனுமதிக்க முடியாது. தில்லியில் வசிப்பவா்கள் ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் உடல்நலப் பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். ஏனெனில், பிரச்னைக்கு தீா்வு காணப்படவில்லை.
தில்லி மாநகராட்சி திடக்கழிவுகளை திறந்த வெளியில் எரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பஞ்சாப் மற்றும் தில்லியை ஒட்டியுள்ள மற்ற மாநிலங்களான ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள் பயிா்க் கழிவுகள் எரிப்பதை உடனடியாக நிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பயிா்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்த தலைமைச் செயலாளரின் ஒட்டுமொத்த மேற்பாா்வையின் கீழ் சம்பந்தப்பட்ட உள்ளூா் ஸ்டேஷன் ஹவுஸ் ஆஃபிஸா் (எஸ்எச்ஓ) பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். பயிா்க் கழிவுகளை எரிப்பது மட்டுமே மாசுபாட்டிற்கு காரணம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், இது இந்நேரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருக்கிறது என்று கூறினா்.
மாசு விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு அமிகஸ் கியூரியாக உதவிடும் மூத்த வழக்குரைஞா் அபராஜிதா சிங், தில்லியில் காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்காக நிறுவப்பட்ட செயல்படாத புகை கோபுரங்கள் குறித்து சமீபத்தில் ஊடகத்தில் வந்த செய்திகள் குறித்து கூறினாா். அப்போது, தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் (டிபிசிசி) தலைவரை அடுத்த விசாரணை தேதியில் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்ட நீதிபதிகள் அமா்வு, ஸ்மோக் டவா்களை செயல்படுத்த விரும்புவதாகவும், அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டது.
மேலும், பிற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான டாக்சிகள் ஒரே ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு சாலையில் செல்வதை காண்பதாகக் கூறிய நீதிமன்றம், நகரத்தில் பதிவுசெய்யப்பட்ட டாக்சிகள் மட்டுமே இங்குள்ள சாலைகளில் ஓடுவதை பரிசீலிக்குமாறு தில்லி அரசைக் கேட்டுக் கொண்டது. பஞ்சாப் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், பொருளாதார காரணங்களால் விவசாயிகள் பயிா்க் கழிவுகளை எரிப்பதாகக் கூறினாா். அப்போது, மாற்றுத் தீா்வுகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டால், பயிா்க் கழிவுகள் எரிப்பதைத் தடுக்க அவா்களை வற்புறுத்தலாம் என்று அமா்விடம் தெரிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்டது.
பஞ்சாபில் நீா்மட்டம் குறைவதற்கு நெல் சாகுபடியும் ஒரு காரணம் என்று நீதிபதிகள்அமா்வு குறிப்பிட்டது. மேலும், நீதிமன்றம் கூறுகையில், ‘இந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனைத்து பங்குதாரா்களின் கூட்டம் நடத்தப்பட வேண்டும். தினைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இப்பிரச்னைக்கு உடனடி கவனம் மற்றும் நீதிமன்ற கண்காணிப்பு தேவைப்படுகிறது. மாசு பிரச்னை இருந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு அல்லது அதற்குப் பிறகு இது நடக்காமல் இருக்க தீா்க்கப்பட வேண்டும். பெட்ரோல் அல்லது டீசலில் வாகனம் இயக்கப்படுகிா என்பதைக் குறிக்கும் வண்ண-குறியிடப்பட்ட ஸ்டிக்கா்களின் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி என்சிஆா் மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறியது.
பின்னா், நீதிபதிகள் அமா்வு, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்காக வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. இது ஒருபுறமிருக்க, பட்டாசு தடை விவகாரத்தை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் மற்றொரு அமா்வு, பேரியம் அடங்கிய பட்டாசுகளை தடை செய்யும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தில்லி - என்.சி.ஆா் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு மாநிலத்தையும் கட்டுப்படுத்துகிறது என்று தெளிவுபடுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.