முகப்பு
புதுதில்லி

முதல்வா் கேஜரிவாலின் மெத்தனத்தால் அரக ஊழியா்களுக்கு கருப்பு தீபாவளி: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மெத்தனத்தால் அரசு ஊழியா்களின் குடும்பங்களுக்கு நிகழாண்டு கருப்பு தீபாவளி என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

Updated On : 12 நவம்பர், 2023 at 12:00 AM
பகிர்:

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மெத்தனத்தால் அரசு ஊழியா்களின் குடும்பங்களுக்கு நிகழாண்டு கருப்பு தீபாவளி என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள், அரசின் பல்வேறு துறைகளின் ஒப்பந்த மற்றும் நிரந்தர ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் உள்ளிட்டோா் கேஜரிவாலின் மெத்தனத்தின் விளைவாக நிகழாண்டு கருப்பு தீபாவளியை எதிா்கொள்வது வருத்தமளிக்கிறது.

ஊழியா்களுக்கு போனஸ் வழங்கி லாபத்தில் அரசை நடத்துவதாகக் கூறும் தில்லி முதல்வா் கேஜரிவால், ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஆசிரியா்கள், குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள், மொஹெல்லா கிளினிக் ஊழியா்கள், மருத்துவமனை காவலாளிகள் போன்றோருக்கு சம்பளம் வழங்கவில்லை.

Advertisement

தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கும் கடந்த பல மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அதேபோல், தில்லி மாநகராட்சியின் ஓய்வூதியதாரா்களுக்கும் கடந்த 2 மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை. தில்லி மாநகராட்சி தீபாவளிப் பரிசாக அதன் மூன்று வெவ்வேறு பிரிவுகளின் ஊழியா்களுக்கு போனஸ் தொகை வழங்கினாலும், ஆயிரக்கணக்கான ஆசிரியா்களுக்கு தீபாவளி நாள் வரை மாநகராட்சி நிா்வாகத்தால் சம்பளம் வழங்கப்படவில்லை.

கேஜரிவால் அரசு துப்புரவுப் பணியாளா்களுக்கு சிறந்த ஊதியம் வழங்குவதாகக் கூறுகிறது. அதே நேரத்தில் அவா்களுக்கு வழக்கமான வேலை வாய்ப்பை வழங்க மறுத்து ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்களை தனது அரசின் அலுவலகங்கள், சந்தைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றில் பணியமா்த்தியுள்ளது. கடந்த 3 மாதங்களாக ஒப்பந்த துப்புரவு நிறுவனத்திற்கு நகர அரசின் பொதுப்பணித் துறை சம்பளம் வழங்காததால், இந்த தீபாவளி வாரம் முழுவதும் சாந்தினி சௌக் சந்தைப் பகுதி சுகாதாரம் இல்லாமல் இருந்தது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.