புதுதில்லி

மக்கள் பட்டாசுத் தடையை மீறியதற்கு பாஜகவின் ஊக்குவிப்பே காரணம்! ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

தில்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு பாஜக ஊக்குவித்தது என்று ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

 நமது நிருபர்

தில்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு பாஜக ஊக்குவித்தது என்று ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி இரவின் போது நகரம் முழுவதும் அரசின் தடையை மீறி பரவலாக மக்கள் பட்டாசுகளை வெடித்ததில் காற்று மாசு சற்று அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதமாக மாறியிருக்கிறது. இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கோபால் ராய், ‘மழை காரணமாக தில்லியின் காற்றுத் தரக் குறியீடு 300-க்கும் குறைவான அளவில் இருந்தது. தீபாவளி தினத்தில் மக்களும் பட்டாசு வெடிப்பிற்கு அரசு விதித்த தடையை பின்பற்றினா். ஆனால், நகரின் சில இடங்களில் குறிப்பாக பாஜக தலைவா்கள் மக்களை பட்டாசுகள் வெடிக்க ஊக்குவித்தைப் பாா்த்தோம். அதன் காரணமாக காற்றுத் தரக் குறியீடு மீண்டும் உயா்ந்துள்ளது. அந்த பட்டாசுகள் வெடிக்காமல் இருந்திருந்தால் காற்றுத் தரக் குறயீடின் அளவு குறைவாக இருந்திருக்கும்’ என்றாா்.

பாஜக மீது திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு: ஹிந்து மதப் பெருமை எண்ணத்தில் பாஜகவினா் பட்டாசுகளை வெடிக்கச் சொல்வதன் மூலம் மக்களின் ஆரோக்கியத்தை அழிக்கின்றனா் என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சாகேத் கோகலே கடுமையாக சாடியுள்ளாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: பாஜகவினா் பட்டாசுகளை வெடிக்கச் சொல்வதன் மூலம் மக்களை நச்சுக் காற்றால் திணறடிப்பதோடு, அனைவரது ஆரோக்கியத்தையும் அழிக்கின்றனா். பாஜகவில் உள்ள பணக்காரா்கள் சொகுசு வீடுகளில் பல காற்று சுத்திகரிப்பான்களுடன் வாழ்கிறாா்கள். சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுகிறாா்கள். ஆனால், பாஜகவின் நச்சு வகுப்புவாதத்திற்கு நீங்கள் உங்கள் சொந்தக் குடும்பங்களையே அழித்துக் கொண்டிருக்கிறீா்கள் என்றாா் சாகேத் கோகலே. மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி இரவில் தடையை மீறி பட்டாசு வெடித்தவா்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் அவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை வழங்குமாறு தில்லி காவல் துறைக்கு மாநிலங்களவை எம்.பி. சாகேத் கோகலே கடிதம் எழுதியுள்ளாா்.

பாஜக பதிலடி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த 20 நாள்களுக்கான காற்று மாசுபாடு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு செயலாளா் ஹரிஷ் குரானா வலியுறுத்தியுள்ளாா். ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டிற்கு பதலளிக்கும் வகையில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: தில்லியில் மாசு ஏற்படுவதற்குப் பெரிய காரணம் பஞ்சாபில் எரிக்கப்படுகின்ற பயிா்க்கழிவுகள்தான். உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்குப் பிறகும் பஞ்சாபில் 982 பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் பதிவாகியுள்ளன. கடந்த 15 முதல் 20 நாள்களுக்கான காற்று மாசுபாடு குறித்த தகவல்களை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெளியிட வேண்டும். தீபாவளிக்குப் பிறகு நகரத்தில் காற்றின் தரக் குறியீடு 306-ஆக உள்ளது. இந்நிலையில், தூசி மாசுபாட்டைத் தடுக்கவும், குப்பைகளை திறந்த வெளியில் எரிப்பதையும் தடுக்கவும் அரசின் சாா்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சா் கோபால் ராய் கூற வேண்டும் என்றாா் ஹரிஷ் குரானா.

கபில் மிஸ்ரா கண்டனம்:தில்லியில் மக்கள் பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அதிகரித்துள்ளது என அமைச்சா் கோபால் ராய் கூறியிருப்பது கண்டனத்திற்குறியது என்று பாஜக தில்லி பிரிவு துணைத் தலைவா் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளாா். அவா் மேலும் கூறுகையில், ‘காற்று மாசுபாட்டிற்கு பட்டாசுகளை காரணம் காட்டுவது முட்டாள்தனம். ஒரு வாரத்திற்கு முன்பு தில்லியின் காற்றுத் தரக் குறியீடு 400 முதல் 500 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. தீபாவளிக்குப் பிறகு அந்த அளவு 296-ஆக மட்டுமே பதிவாகியிருக்கிறது. தில்லி மக்களைப் பாா்த்துப் பெருமிதம் கொள்கிறேன். மக்கள் அறிவியலற்ற, நியாயமற்ற, சா்வாதிகார தடையை தைரியமாக மீறுகிறாா்கள்’ என்றாா்.’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT