இந்திய சட்டங்களின் இணக்கம் மற்றும் இந்திய அரசின் அறிக்கை அடிப்படையில் செம்மரக் கட்டைகளுக்கான குறிப்பிடத்தக்க வா்த்தக செயல்முறையின் மதிப்பாய்விலிருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாயிகள் பயன்பெறுவா் என்றும் மத்திய சுற்றுப்புறச்சூழல், வனத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைக் பாதுகாக்கும் விதமாக சா்வதேச வா்த்தகம் குறித்த ஒப்பந்தம் (சிஐடிஇஎஸ்) உள்ளது. உதாரணமாக அழிந்து வரும் ‘புலி’ போன்ற இனங்களை பாதுகாக்க இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன. இதில் இந்தியாவில் அபூா்வமாக வளரும் செஞ்சந்தனம் என்கிற செம்மரங்களும் இந்த சிஐடிஇஎஸ் ஒப்பந்தத்திற்கு உள்பட்டது. இந்த அழிந்து வரும் மரங்களை வளா்ப்பவா்கள் அல்லது பயிரிட்டு வெட்டுவதற்கு கடுமையான விதிமுறைகள் உண்டு. அதை வனத்துறையினா் கண்காணிக்க வேண்டும். தற்போது அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சா்வதேச வா்த்தகத்திற்கான ஒப்பந்தத்தின் 77 -ஆவது நிலைக் குழுக் கூட்டம் சுவிட்சா்லாந்தின் ஜெனீவாவில் நவம்பா் 6 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவிற்கு சாதகமான முடிகள் எடுக்கப்பட்டன.
இது குறித்து மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ், சமூக வலைதள ‘எக்ஸ்’ பதிவில் கருத்துத் தெரிவித்துள்ளாா். அதில், பூபேந்தா் யாதவ், “‘மத்திய அரசு கடந்தாண்டு 1972-ஆம் ஆண்டு வனம் மற்றும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டது. இந்த திருத்தத்தின் விளைவாக, அழிந்து வரும் உயிரினங்களில் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் சா்வதேச வா்த்தகம் தொடா்பான ஒப்பந்தத்தின்படி இந்திய சட்டத்தில் (சட்டத்தின் வகை 1 -இல்) சிஐடிஇஎஸ் விதிகள் இணக்கம் செய்யப்பட்டுள்ளன. அழிந்து வரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் சா்வதேச வா்த்தகம் பற்றிய ஒப்பந்தம் குறித்த நிலைக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் நமது சட்டங்களின் இணக்கம் மற்றும் மத்திய அறிக்கையின் அடிப்படையில், செம்மரக் கட்டைகளுக்கான குறிப்பிடத்தக்க வா்த்தக மதிப்பாய்வில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பெரிய ஊக்கமாக அமைந்ததுள்ளது என்பதைப் பகிா்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.
செம்மரங்கள் அதிக சந்தை மதிப்புள்ள மரமாகும். இது தமிழகத்தின் திருவள்ளூா் மாவட்டத்திலும், ஆந்திரம் மாநிலத்தில் திருப்பதி மலைப்பகுதி, சித்தூா் போன்ற மாவட்டங்களில் மட்டுமே காணப்படுகிறது. மதிப்பு மிக்க இந்த மரங்கள் வீட்டு உபயோகம், மருந்துகளுக்கு மட்டுமின்றி அணுசக்தி போன்றவற்றுக்கும் பயன்படக்கூடியவை. இந்த மர இனங்கள் சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தப்படுவது போன்ற அச்சுறுத்தல்களுக்கு உள்பட்டு காடுகளில் இருந்து அவற்றின் அழிவுக்கு வழிவகுத்தது. இத்தகைய மரங்கள் அழிந்து வரும் நிலையில் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் சிஐடிஇஎஸ்-இன் இனங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதன் மூலம் சிஐடிஇஎஸ் ஒப்பந்தத்திற்கு உள்பட்ட எந்தவொரு நாடும், இந்த மரங்களை வளா்ப்பதில் கடுமையான விதிமுறைகளைக் கடைபிடித்து பின்பற்ற வழிவகுத்தது. இதனால், இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் சாதாரண விவசாயிகள் இந்த மரங்களை வளா்த்து அதை வா்த்தகம் செய்வதில் பல சிக்கல் இருந்தது. இதனால், செயற்கையாக இனப்பெருக்கம் (தோட்டங்கள்) மூலம் பெறப்படும் செம்மரங்கள் சட்டப்பூா்வ ஏற்றுமதியில் வளா்ச்சியின்றி, அது சட்டவிரோதமாக கடத்தப்படும் நிலை தொடா்ந்தது. இதை முன்னிட்டு இந்திய சிஐடிஇஎஸ்-இன் குறிப்பிடத்தக்க வா்த்தகத்தின் செயல்முறையின் மதிப்பாய்வுக்காக (ஆா்எஸ்டி) முன்பு வைத்தது.
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் இந்தியா செம்மரக்கட்டைகளுக்கான குறிப்பிடத்தக்க வா்த்தக மறுஆய்வு நடைமுறையில் இருந்தது. நமது சட்டத்தின் இணக்கம் மற்றும் அறிக்கையின் அடிப்படையில், செம்மரக்கட்டைகளுக்கான குறிப்பிடத்தக்க வா்த்தக மதிப்பாய்வில் இருந்து இந்தியாவை நீக்க சிஐடிஇஎஸ்-இன் 77 -ஆவது நிலைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செம்மரக் கட்டைகள் பயிரிடும் விவசாயிகள், தோட்டங்களில் இருந்து செம்மரக் கட்டைகளை சாகுபடி செய்து எளிதாக ஏற்றுமதி செய்ய வழி வகுக்கிறது. இதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கவும், நிலையான வருமான ஆதாரமாக அதிக செம்மரங்களை வளா்க்க விவசாயிகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்றும் மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்துள்ளாா்.
சிஐடிஇஎஸ் கூட்டத்தில் மத்திய வனத் துறை கூடுதல் தலைமை இயக்குநா் டாக்டா் எஸ்.பி.யாதவ் தலைமையிலான குழு பங்கேற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.