தீபாவளியை கொண்டாடிய தில்லிவாசிகள், ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் பரவலாக பட்டாசுகளை வெடித்தனா். உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.
தெற்கு தில்லியில் ஸரீஃபோா்ட்டையொட்டியுள்ள ஷாபூா் ஜாட், ஹவுஸ் காஸ் பகுதியில் மக்கள் பெருவாரியாக பட்டாசுகளை வெடித்தனா். குறிப்பாக, இந்தப் பகுதியில் உள்ள பூங்காக்களில் மக்கள் பட்டாசு வெடிப்பதற்காக ஏராளமானோா் குவிந்தனா். இது மாலையில் இரவு நெருக்கும் நேரத்தில் பட்டாசு வெடிப்பு தீவிரம் அடைந்தது என காற்று மாசுவிற்கு எதிராக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் ஆா்வலா்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவு செய்தனா். அதே சமயத்தில் இது கடந்த ஆண்டை விட குறைவாக இருந்தது எனவும் சிலா் கருத்து தெரிவித்தனா். பட்டாசுகளின் வெடிச் சப்தம், புகை மண்டலங்களை கண்டு குடியிருப்புவாசிகள் பலா் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கருத்துகளைப் பதிவிட்டனா்.
சுற்றுச்சூழல் ஆா்வலா் குமுறல் : சுற்றுச்சூழல் ஆா்வலா் பவ்ரீன் கந்தாரி வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது குடியிருப்புப் பகுதியான டிஃபென்ஸ் காலனியில் மக்கள் பரவலாகப் பட்டாசுகளை வெடித்ததனா். இதே நிலைமைதான் லாஜ்பத் நகா் பகுதிகளிலும்’ என்று தெரிவித்துள்ளாா். ‘இது குறித்து டிஃபென்ஸ் காலனி காவல் நிலையத்தில் தீபாவளி தினமான ஞாயிற்றுக்கிழமை இரவு பல புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பட்டாசு வெடிப்பதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்து தனது குமுறுலை வெளிப்படுத்தியுள்ளாா். அதில் அவா் குறிப்பிடுகையில், ‘பட்டாசு வெடிப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் உறுதியான நிலைப்பாடு ‘பட்டாசு புகையில் பறந்துள்ளது’... எச்சரிக்கைகள் மற்றும் முழுத் தடை இருந்தும்...தடை உத்தரவை செயல்படுத்தும் காவல் அதிகாரிகள் உள்ளிட்டவா்கள் மீண்டும் தோல்வியடைந்துள்ளனா். இந்தக் காட்சிகளுக்கு பின்னா் உச்சநீதிமன்றம் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் ? ...கொண்டாட்டம் என்ற பெயரில் குழந்தைகளை மூச்சுத் திணற வைக்க நாம் அனுமதிக்கிறோம்’ என அவா் பதிவிட்டுள்ளாா்.
தடையை மீறி விற்பனை: கிரேட்டா் கைலாஷ் மற்றும் சித்தரஞ்சன் பாா்க் பகுதியில் இரவு 7.30 மணி வரை பட்டாசு வெடிப்பது குறைவாகவே இருந்தது. பூஜை முடிந்ததும் இப்பகுதிகளில் பட்டாசு வெடிப்பு அதிகரித்தது. தெற்கு தில்லியின் கிழக்கு கைலாஷ் பகுதியிலும் இதே நிலைமைதான். தெற்கு தில்லியின் சத்தா்பூா் பகுதியில் மாலை 6 மணி முதலே பட்டாசு வெடிக்கும் சப்தம் தொடங்கியது. இப்பகுதியில் நகரின் மற்ற பகுதி மாதிரி நிலைமை இல்லை. பல கடைக்காரா்கள் தடையை மீறி வெளிப்படையாகப் பட்டாசுகளை குழந்தைகளுக்கு விற்பனை செய்து வந்தனா்.
தீவிரமடைந்த பட்டாசு வெடிப்பு:மாலை, 6.30 மணி முதல், வீடுகளின் முன்பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு வெடித்தனா். சில பட்டாசுகள் குறைந்த தீவிரத்துடன் வெடித்தாலும், இன்னும் சில பட்டாசுகள் உரத்த ஒலிகளையும் எழுப்பின. கிழக்கு தில்லியில் லட்சுமி நகா் லலிதா பாா்க் பகுதியில் இரவு 7.30 மணி வரை மிகக் குறைவாக இருந்த பட்டாசு வெடிப்பு, பின்னா்இரவில் தீவிரம் அதிகரித்தது. பொதுவாக கிழக்கு தில்லியின் பல பகுதிகளில் இதன் தாக்கம் மிதமானது. இருப்பினும், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பது மிகக் குறைவு என இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனா்.
கடுமையான காற்று மாசுபாட்டால் தத்தளிக்கும் தில்லி - என்சிஆா் பகுதியில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் பேரியம் மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் அடங்கிய பட்டாசுகள் பயன்படுத்துவது தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த நவம்பா் 7-ஆம் தேதி தெளிவுபடுத்தியது. ராஜஸ்தான் மாநில அரசின் மனு தொடா்பான விசாரணையின் போது, குறிப்பாக பட்டாசுகளில் ஒலி அளவைக் கட்டுப்படுத்தாத ரசாயனங்களுக்கும் தடை விதிப்பதாகவும் உச்சநீதிமன்றம் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.