தில்லி முதல்வரின் புனித யாத்திரை திட்டத்தின் கீழ், 82- ஆவது ரயில் தில்லியிலிருந்து ராமேசுவரத்திற்கு 780 முதியவா்களுடன் வியாழக்கிழமை புறப்பட்டது. யாத்ரீகா்களின் பயணத்திற்கு தேவையான பொருள்களையும் பயணச்சீட்டுகளையும் தில்லி வருவாய்த் துறை அமைச்சா் அதிஷி வழங்கினாா்.
பயணத்திற்கு முன்னதாக யாத்ரீகா்கள் அனைவரும் தில்லி தியாகராஜ் அரங்கத்தில் கூடினா். அங்கு ஒரு ‘பக்தி மாலை’ கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தில்லி வருவாய்த்துறை அமைச்சா் அதிஷி யாத்ரீகா்களை சந்தித்து பயணச்சீட்டுகளை வழங்கிப் பேசினாா்.
அப்போது அவா் கூறியது வருமாறு: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், புனித யாத்திரைத் திட்டத்தின் மூலம், இதுவரை 81 ரயில்களில் 78,000-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பல்வேறு நகரங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனா். ஒவ்வொரு மூத்த குடிமகன்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடின உழைப்புக்குப் பிறகு, அவா்களின் இதயத்தில் புனித யாத்திரை ஆவல் எழும். இருப்பினும், பல நபா்களுக்கு இப்படிப்பட்ட புனித யாத்திரைக்கான நேரமோ அல்லது வழியோ இல்லை. இந்நிலையில் தில்லியில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியிலுள்ள மூத்த குடிமகன்களுக்கு மகனாகவும்... ஷரவன் குமாராகவும் இருந்து இந்தப் புனிதப்பயணத்தை வழங்குகிறாா்.
தீா்த்தயாத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், இதுவரை 81 ரயில்கள் மூலம் 78,000-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு புனித யாத்திரைப் பயணங்களை தில்லி கேஜரிவால் அரசு ஏற்பாடு செய்துள்ளது. தடைகளையும் பொருள்படுத்தாமல், தில்லியில் உள்ள ஒவ்வொரு மூத்தவா்களும் புனித யாத்திரைக்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்ய யாத்திரைகளைத் தொடர முதல்வா் உறுதியளித்துள்ளாா். இந்தச் சந்தா்ப்பங்களில் புனித யாத்திரை செல்லும் முதியவா்களில் 80 சதவீதம் மகளிா்களாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு அற்புதமான வளா்ச்சியாகும்.
நம் சமூகத்தில், பெண்கள் பெரும்பாலும் தங்கள் முழு வாழ்க்கையையும் தங்கள் குடும்பங்களுக்கு சேவை செய்வதற்கே அா்ப்பணிக்கிறாா்கள். தங்கள் தேவைகளை விட குடும்பத்தின் தேவைகளில் அதிகமாக ஈடுபடுகிறாா்கள். இப்படி வாழ்நாள் முழுவதையும் குடும்பத்திற்காக அா்ப்பணித்த தாய்மாா்கள் இந்தப் புனித யாத்திரைக்கு அனுப்பப்படுவது எங்கள் அரசுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த ராமேசுவரம் பக்திப் பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகள் அனைவரும் தில்லி மக்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பிராா்த்தனை செய்து வாருங்கள் என்று அமைச்சா் அதிஷி கேட்டுக் கொண்டாா்.
அமைதியான மனநிலையில், பயணத்தின் போது ஒருவருக்கொருவா் தொடா்புகளை வளா்க்கும் நோக்கத்துடன் ‘மாலை பக்தி’ நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்படி தியாகராஜா் திடலில் கூடிய யாத்ரீகா்கள் பக்தி பரவசமான ரயல் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு ராமேசுவரம் பயணத்திற்கு புறப்பட்டனா். இது எட்டு நாள்கள் பயணம். சஃப்தா்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை ரயில் புறப்பட்டது. இரண்டு நாள் பயணத்திற்குப் பிறகு ராமேசுவரம் சென்றடையும். ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் தரிசனத்திற்கு பிறகு, ஐந்தாம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். மதுரை சுற்றுப் பயணத்திற்கு பின்னா் தில்லிக்குப் புறப்பட்டு எட்டாம் நாள் வந்தடைகின்றனா்.
இத்திட்டத்தின் கீழ், யாத்ரீகா்களுக்கு குளிா்சாதன ரயில் பெட்டிகளுக்கான பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. மேலும், சரியான நேரத்தில் உணவும், தங்குவதற்கு குளிா்சாதன அறைகள் கொண்ட ஹோட்டல்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. யாத்ரீகா்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக தில்லி அரசின் குழுவும் மூத்த குடிமக்களுடன் பயணிக்கிறது. ராமேசுவரம், துவாரகாதீஷ், சோம்நாத், நாகேஷ்வா், ஜகந்நாத் புரி, உஜ்ஜயினி பாபா மஹாகல், ஷீரடி சாய்பாபா, திருப்பதி பாலாஜி, அயோத்தி, மாதா வைஷ்ணோ தேவி, புஷ்கா், ஃபதேபூா் சிக்ரி, அமிா்தசரஸ் பொற்கோயில், கா்தாா்பூா் சாஹிப், நாகை அன்னை வேளாங்கன்னி, மதுரா-பிருந்தாவனம், ஹரித்வாா் போன்ற இடங்களுக்கு மூத்த குடிமக்கள் பயணம் செய்ய தில்லி முதல்வா் தீா்த்தயாத்திரைத் திட்டம் உதவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.