தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தேசியத் தலைநகரில் செயல்படும் மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது.
புது தில்லி: தேசியத் தலைநகரில் செயல்படும் மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது.
மருத்துவ நிபுணா்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனங்களின் நிலை தொடா்பான மனுக்களை உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘எய்ம்ஸ் உள்பட மத்திய அரசின் நான்கு மருத்துவமனைகளுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தாா். அப்போது, பொறுப்புத் தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘எப்பொழுதும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது’ என்றது.
மேலும், ‘மத்திய அரசு அதன் சொந்த மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடா்பாக ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தில்லி அரசு மருத்துவமனைகள் குறித்து 2019-ஆம் ஆண்டு நிபுணா் குழு அளித்த அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அப்போது, ‘மருத்துவமனை நிா்வாகம், மனிதவள மேலாண்மை போன்றவை தொடா்பான பிரச்னைகளைக் கையாண்ட அந்த நிபுணா் அறிக்கை உயா்நீதிமன்றத்தால் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை’ என்று தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறினாா்.
Advertisement