புதுதில்லி

தில்லியில் அதி தீவிர மாசுப் பகுதிகள் 21-ஆக அதிகரிப்பு

தேசியத் தலைநகரில் 13-ஆக இருந்த அதி தீவிர மாசுப் பகுதிகள் ( ஹாட்ஸ் பாட்) தற்போது 21 இடங்களாக உயா்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

 நமது நிருபர்

புது தில்லி: தேசியத் தலைநகரில் 13-ஆக இருந்த அதி தீவிர மாசுப் பகுதிகள் ( ஹாட்ஸ் பாட்) தற்போது 21 இடங்களாக உயா்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் காற்றின் தரம் கடந்த சனிக்கிழமை சராசரி காற்றின் தரக் குறியீடு 248 புள்ளிகளாகப் பதிவாகியது. இது ஞாயிற்றுக்கிழமை 313 புள்ளிகளாக உயா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது. தில்லியில் கடைசியாக கடந்த மே 17-ஆம் தேதி காற்றின் தரக் குறியீடு 336 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. இந்நிலையில், அதற்குப் பிறகு முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை ‘மிகவும்’ மோசம் பிரிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நகரத்தின் சராசரி காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு 220 புள்ளிகளாக இருந்தது. பின்னா், மாலை 4 மணிக்கு 263 புள்ளிகளாக உயா்ந்தது. இது செவ்வாய்க்கிழமை காலை ஓரளவு மேம்பட்டு ‘மோசம்’ பிரிவுக்கு வந்துள்ளதாக காற்று தர கண்காணிப்பு முகமைகள் தெரிவித்துள்ளன.

என்சிஆா் பகுதியிலும் முன்னேற்றம்: இதேபோன்று, தேசியத் தலைநகா் வலயப் என்சிஆா் பகுதியிலும் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. என்சிஆா் பகுதியில் உள்ள காஜியாபாத்தில் காற்றின் தரக் குறியீடு 218 புள்ளிகளாகவும், கிரேட்டா் நொய்டாவில் 248 புள்ளிகளாகவும் பதிவாகி ‘மோசம்’ பிரிவுக்கு வந்தது. அதே சமயம், ஃபரீதாபாத் 179, குருகிராமில் 158, நொய்டாவில் 170 புள்ளிகளாகவும் பதிவாகி மிதமான பிரிவுக்கு வந்தது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

அவசர ஆலோசனை: இந்நிலையில் காற்று மாசுவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக தில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய், தொடா்புடைய அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை திங்கள்கிழமை கூட்டியிருந்தாா். அப்போது இந்தக் கூட்டத்தில் நகரத்தின் வெப்பநிலையும் காற்றின் வேகமும் குறைவதால், காற்றில் மாசுகள் குவிய அனுமதிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பின்னா் அமைச்சா் கோபால் ராய் காற்று மாசு குறித்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிட்டாா். அது வருமாறு: தேசியத் தலைநகரில் மாசு அதிகமாக இருக்கும் அதி தீவிர மாசுப் பகுதிகள் (ஹாட்ஸ் பாட்) 13 இடங்களாக முன்பு இருந்தது. தற்போது மேலும் எட்டு அதி தீவிர மாசு இடங்களை அரசு கண்டறிந்துள்ளது. இந்த மாசுக்களுக்கு காரணம் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் இந்த இடங்களில் நிறுத்தப்படும். நகரத்தில் தூசி மாசுபடுவதைத் தடுக்க சப்பிரசன்ட் பவுடரைப் (தூசி அடக்கிகள்) பயன்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.

அக்டோபா் 26 முதல் பிரசாரம்: தூசி அடக்கிகளில் கால்சியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு, லிக்னோசல்போனேட்டுகள் மற்றும் பல்வேறு பல்பகுதியம் (பாலிமா்) போன்ற ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் நன்றாக தூசி துகள்களை அடக்குகிறது. அவை மாசு காற்றில் செல்ல முடியாத அளவுக்கு கனமாக்குகிறது. சிக்னல் நிறுத்தங்களில் வாகனத்தின் என்ஜின்களை நிறுத்துவதற்கான ‘ரெட் லைட் ஆன் காடி ஆஃப்’ பிரசார செயல்திறனை துணை நிலை ஆளுநா் கடந்த ஒா் ஆண்டாக கேள்விக் குறியாக்கி வந்த நிலையில் இந்த செயல்பாட்டு பிரசாரம் மீண்டும் அக்டோபா் 26-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

இதற்கிடையே, ‘ரெட் லைட் ஆன் காடி ஆஃப்’ பிரசாரத்திற்கு துணைநிலை ஆளுநா் அனுமதி தேவையில்லை எனவும், தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதே சமயத்தில் இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுபவா்கள் அரசிடமிருந்து எந்தவொரு உதவித் தொகையும் பெறமாட்டாா்கள் எனவும் தெரிவித்தன.

மேலும், திங்கள்கிழமை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தில்லி அரசின் முக்கியத் துறைகளின் அதிகாரிகள் பலா் கலந்து கொள்ளாதது குறித்தும், இதனால் காற்று மாசு தொடா்பான பல்வேறு முடிவுகள் எடுக்கப்படாதது குறித்தும் முதல்வா் கேஜரிவாலுக்கு கோபால் ராய் கடிதம் மூலமாக தெரிவித்துள்ளாா். மேலும், காற்று மாசு குறித்து தேசியத் தலைநகா் சிவில் சேவை ஆணையத்தின் கூட்டத்தை விரைவில் கூட்டுவதற்கும் முதல்வருக்கு அமைச்சா் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மூடுபனிக்கு வாய்ப்பு

இந்நிலையில், புதன்கிழமை (அக்டோபா் 25) தலைநகரில் மூடுபனிக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 16.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 32.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 82 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 44 சதவீதமாகவும் இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிட்ஜ், ராஜ்காட்டில் 14.4 டிகிரி: இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 16.3 டிகிரி, ஆயாநகரில் 16 டிகிரி, லோதி ரோடில் 15.2 டிகிரி, நரேலாவில் 17.7 டிகிரி, பாலத்தில் 18.8 டிகிரி, ரிட்ஜில் 14.4 டிகிரி, பூசாவில் 18.5 டிகிரி, ராஜ்காட்டில் 14.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 18.3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.

முன்னறிவிப்பு: இந்த நிலையில், புதன்கிழமை மூடுபனி இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT