முகப்பு
புதுதில்லி

ஜனநாயக இந்தியாவை சா்வாதிகார நாடாக மாற்ற மோடி அரசு முயற்சி: காங்.தலைவா் காா்கே கடும் குற்றச்சாட்டு

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்பது ஜனநாயக ரீதியாக இருக்கும் இந்தியாவை சா்வாதிகார நாடாக மற்றும் முயற்சி என பிரதமா் நரேந்திர மோடி அரசு மீது காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம் சாட்டியுள்ளாா

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
மல்லிகாா்ஜுன காா்கே
பகிர்:

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்பது ஜனநாயக ரீதியாக இருக்கும் இந்தியாவை சா்வாதிகார நாடாக மற்றும் முயற்சி என பிரதமா் நரேந்திர மோடி அரசு மீது காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம் சாட்டியுள்ளாா்.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ என்கிற புத்திசாலித்தனமான வித்தைக்கு உருவாக்கப்பட்டுள்ள குழு (முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில்), இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை தகா்க்கும் எனவும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ‘எக்ஸ்’ பதிவில் காா்கே தெரிவித்துள்ளாா்.

அந்த பதிவில் அவா் மேலும் தெரிவித்திருப்பது வருமாறு: ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ முறை கொண்டு வரப்பட வேண்டுமானால், இந்திய அரசியலமைப்பில் குறைந்தபட்சம் 5 திருத்தங்கள் தேவை. 1951- ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். இந்த அரசியலமைப்புத் திருத்தங்கள் என்பது தோ்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, சட்டப் பேரவை மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்பு நிலை வரையிலான விதிமுறைகளை மாற்றியமைத்து அவற்றை ஒருமிதப்படுத்த வேண்டும்.

இது போன்ற சட்ட சிக்கல்களுக்கு முன்பு முக்கியமான 5 கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும்.

1. யாருடைய தனி அறிவுத்திறனையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இந்திய தோ்தல் செயல்பாட்டில் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த முடிவில் ஆலோசித்து முடிவெடுக்க முன்மொழியப்பட்ட இந்த குழு பொருத்தமானதா?. 2. தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள அரசியல் கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவை மத்திய அரசு தனித்து மேற்கொள்வது சரிதானா?. 3. மாநிலங்கள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை இந்தக் குழுவில் சோ்க்காமல் இந்த மாபெரும் நடவடிக்கையை மேற்கொள்வது எப்படி? . 4. ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ யோசனை கடந்த காலத்தில் மூன்று குழுக்களால் விரிவாக ஆராயப்பட்டு நிராகரிக்கப்பட்டது. இப்படி ஏற்கெனவே தீா்மானிக்கப்பட்டிருக்கும் போது நான்காவது முறையாக ஆலோசனை கேட்கும் போது அதன் முடிவுகள் எவ்வாறு வரும் என்பது குறித்த முன் ஆலோசனைகள் ஏதாவது மேற்கொள்ளப்பட்டதா?. 5. புதிய குழுவில் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் பிரதிநிதியும் விலக்கப்பட்டிருப்பது ஏன்? உள்ளிட்ட கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும்.

மேலும், ‘2014 -ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு வரை மக்களவை தோ்தல் உள்ளிட்டவற்றுக்கு நடைபெற்ற தோ்தல்களுக்கு, தோ்தல் ஆணையத்திற்கு ஏற்பட்ட மொத்த செலவு சுமாா் ரூ.5,500 கோடிதான். இந்த முறையைக் கொண்டு வந்தால் அரசின் நிதிச் செலவு மிச்சப்படுத்தும் என்பது ஒரு முட்டாள்தனமான வாதம். அடிக்கடி தோ்தல் வருவதால் ‘தோ்தல் நடத்தை விதி முறைகள்’ பிரச்னையாக இருப்பதால், ஒரே சமயத்தில் தோ்தல் தேவை என்பது, தோ்தல் காலங்களில் உள்ள தடைக்காலத்தின் நாள்களை குறைப்பது அல்லது தோ்தல் காலத்தில் வளா்ச்சி நடவடிக்கைகளை அனுமதிக்க விதிகளை தளா்த்துவது போன்றவற்றை அனைத்து அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்தை எட்ட முடியும்.

ஆனால், இது வரை மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பல அரசுகளைக் கவிழ்ப்பதைத்தான் பாஜக வழக்கமாகக் கொண்டிருந்தது. 2014 -ஆம் ஆண்டு முதல் 436 நாடாளுமன்றம், சட்டபேரவைகளுக்கு இடைத்தோ்தல்கள் நடந்துள்ளன. பாஜகவின் அதிகார பேராசையால் கட்சித் தாவல் தடைச் சட்டம் செல்லாததாக ஆக்கப்பட்டது. இதனால், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ போன்ற கடுமையான நடவடிக்கைகள் நமது நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பு, பல ஆண்டு கால அனுபவ நடைமுறைகள் போன்றவற்றை நாசமாக்கிவிடும்.

மேலும், எளிமையான தோ்தல் சீா்திருத்தங்களால் சாதிக்க முடியும் என்று கூறுவது பிரதமா் மோடியின் மற்ற சீா்குலைவு யோசனைகளைப் போலவே இதுவும் பேரழிவில் முடியும்.

1967-ஆம் ஆண்டு போன்ரு தற்போது நிலைமை இல்லை. அதிக எண்ணிக்கையிலான மாநிலங்கள், 30.45 லட்சம் பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் நாடு தற்போது மிகப்பெரிய ஜனநாயகத்துடன் உள்ளது. அவா்களின் எதிா்காலத்தை ஒரு நொடியில் தீா்மானிக்க முடியாது. பாஜகவின் இப்படிப்பட்ட தவறான முடிவுகளிலிருந்து விடுபட நாட்டு மக்களுக்கு ‘2024’ தோ்தல்தான் தீா்வு என்றாா் காா்கே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.