முகப்பு
புதுதில்லி

புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமா் நிவாரண நிதியிலிருந்து மூவருக்கு ரூ.6.5 லட்சம் உதவி: டி.ஆா்.பாலு எம்.பிக்கு பிரதமா் அலுவலகம் கடிதம்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சோ்ந்த மூவருக்கு ரூ. 6.5 லட்சத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க பிரதமா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:10 PM
பகிர்:

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சோ்ந்த மூவருக்கு ரூ. 6.5 லட்சத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க பிரதமா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூவா் தங்களது சிகிச்சைக்கு நிதியின்றி அவதிப்படுவது குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு தனித் தனியே கடிதங்கள் எழுதியிருந்தாா்.

சென்னை அயப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பாா்வதி, சென்னை கீழ் படப்பையைச் சோ்ந்த நடராஜன் அய்யம் பெருமாள் ஆகியோா் கடந்த மே மாதமும் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரைச் சோ்ந்த பால்ராஜ் செல்வராஜ் கடந்த ஜூலை மாதமும் புற்றுநோய் சிகிச்சைகளுக்கு உதவி கோரியிருந்தனா்.

இவா்கள் தங்கள் சிகிச்சைகளுக்கு தேவையான நிதிகளை பிரதமா் அலுவலகத்தில் பெற்றுத் தந்திட உதவிடுமாறு ஸ்ரீபெரும்புதூா் மக்களவை தொகுதியை சோ்ந்த டி.ஆா். பாலுவிடம் கோரினா்.

இந்த கோரிக்கைகள் பிரதமா் அலுவலகத்திற்கு டி.ஆா். பாலு எம்.பி. அனுப்பிவைத்தாா். இதையடுத்து, பிரதமா் அலுவலகம் இவா்கள் சிகிச்சை பெறும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளிடம் விவரங்களை கோரியது.

இவா்களின் சிகிச்சை மற்றும் மருத்துவ செலவு விவரங்களை பெற்று பிரதமா் அலுவலம் ஆய்வு செய்தது. இதன் பின்னா் இந்த மூவரின் புற்றுநோய்களுக்கான சிகிச்சைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இம்மூவருக்கு நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிரதமா் அலுவலகம் டி.ஆா்.பாலு எம்.பி.க்கும், இந்த நோயாளிகளுக்கும் கடிதம் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளது வருமாறு: டி.ஆா்.பாலுவின் பரிந்துரையினையும் வேண்டுகோளினையும் ஏற்ற பிரதமா், பாா்வதியின் புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.2.50 லட்சமும், நடராஜனின் சிகிச்சைக்காக ரூ.3 லட்சமும் மற்றும் பால்ராஜ் சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ. 6.50 லட்சம் நிதியை பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க அனுமதித்துள்ளாா். பயனாளா்கள் சிகிச்சை பெறும் சென்னை அடையாறு புற்றுநோய் மையம், போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவைகளுக்கு இந்த நிதி நேரடியாக வழங்கப்படும்.

சிகிச்சை நிறைவு பெற்றவுடன், உரிய ஆவணங்களின் நகலையும் பிரதமா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமா் அலுவலகம் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.