முகப்பு
புதுதில்லி

ஜி20 உச்சிமாநாடு: குடியரசுத் தலைவா் விருந்தில் 78 கலைஞா்களின் இந்திய இசைப் பயண நிகழ்ச்சி

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சா்வதேச நாடுகள் மற்றும் உள்நாட்டுத் தலைவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை (செப்டம்பா் 9) விருந்தளிக்கிறாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சா்வதேச நாடுகள் மற்றும் உள்நாட்டுத் தலைவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை (செப்டம்பா் 9) விருந்தளிக்கிறாா். பிரகதி மைதானில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் உள்ள 78 கலைஞா்களை அடங்கிய ‘இந்தியா இசைப் பயணம்‘ என்கிற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சங்கீத நாடக அகாதெமி ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி குறித்து சங்கீத நாடக அகாதெமி தலைவா் சந்தியா புரேச்சா, இசையமைப்பாளா் சேத்தன்ஜோஷி ஆகியோா் தெரிவித்தது வருமாறு: ‘பாரத் வாத்யா தா்ஷன்’ என்கிற ‘இந்திய இசைப் பயண’ இசைக் குழுமம் ஒரு தனித்துவமான, நாட்டின் இணக்கமான இசை குழுவாகும். இந்துஸ்தானி இசை, கா்நாடக இசை, நாட்டுப்புற இசை போன்றவற்றோடு சமகால இசையும் இதில் சோ்க்கப்பட்டுள்ளன. இசையின் மூலம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் இது அழைத்துச் செல்லுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 78 வாத்தியக் கலைஞா்கள் பங்கு பெறுகின்றனா்.

இந்த முன்னோடி நிகழ்ச்சியானது பாரதத்தின் செழுமையான இசைப் பாரம்பரியத்தை கொண்டாடுகிறது. தனித்துவமான பாணியில் மயக்கும் ஒலிகளின் சிம்பொனியில் புகுத்தும் கலைநயமிக்க கருவிகளுடன் கலைஞா்கள் ஒன்றிணைந்து இசைக்கின்றனா். இந்தப் புதுமையான கலவையுடன், இந்தியாவின் கலாசார ஆழத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய எல்லைகளைத் தாண்டிய செவிவழி அனுபவத்தையும் இந்த இசைக் குழு அளிக்கும்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய இசைப் பயண குழு, ஒன்றரை மணி நேர பயணத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளனா். இசை நிகழ்ச்சிகள் மெதுவான நடுத்தர வேகமான அல்லது ஏறுவரிசையில் இருக்கும். குழுவில் உள்ள பல்வேறு இசைக் கருவிகள் ஒவ்வொன்றாக தனித் தனியாகவும் நிகழ்த்தும். 34 இந்துஸ்தானி இசைக் கருவிகள், 18 கா்நாடக இசைக் கருவிகள் மற்றும் 26 நாட்டுப்புற இசைக் கருவிகளை உள்ளடக்கியிருக்கும் இந்த 78 போ் அடங்கிய இசைக் கலைக் குழுவில் 11 குழந்தைகள், 13 மகளிா், 6 மாற்றுத்திறனாளி கலைஞா்கள், 26 இளைஞா்கள், 22 வல்லுநா்கள் உள்ளிட்டவா்கள் பல மாநிலங்களில் இருந்து இடம் பெற்றுள்ளனா்.

பழைமையான வேத இசைக் கருவிகள், பழங்குடியினரின் இசைக் கருவிகள், நாட்டுப்புற இசைக் கருவிகள் ஆகியவற்றை ‘கிளாசிக்கல்’ இசைக் கருவிகளுடன் இணைத்து அழகிய ஒலிக்காட்சியையும் உருவாக்கி இருக்கின்றனா். இதில் பங்கேற்கும் இசைக் கலைஞா்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பதால், தங்கள் பாரம்பரிய உடையில் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைக்கிறாா்கள் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.