சரிந்து மீண்டது சென்செக்ஸ்: 4-ஆவது நாளாக முன்னேற்றம்!
பங்குச்சந்தை புதன்கிழமை காலையில் வெகுவாகக் சரிந்தாலும், பின்னர் வலுப்பெற்று நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
பங்குச்சந்தை புதன்கிழமை காலையில் வெகுவாகக் சரிந்தாலும், பின்னர் வலுப்பெற்று நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. ஆனால், வெகுவேகமாக கீழே சென்றது. பின்னர் ஆசிய சந்தைகளில் வர்த்தகம் நிலையாக இருந்ததால் உள்நாட்டுச் சந்தையும் வலுபெறத் தொடங்கியது. குறிப்பாக, குறியீட்டுப் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி உள்ளிட்ட முன்னணி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பு சந்தை வலுப்பெற உதவியது. இதனால், தொடர்ந்து நான்காவது நாளாக சந்தை ஏற்றம் பெற்றது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.316.64 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ. 1,725.11 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
4-ஆவது நாளாக முன்னேற்றம்: காலையில் 36.70 புள்ளிகள் குறைந்து 65,744.19-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,488.03 வரை கீழே சென்றது. பின்னர், பிற்பகலில் அதிகபட்சமாக 65,971.13 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 100.26 புள்ளிகள் (0.15 சதவீதம்) கூடுதலுடன் 65,880.26-இல் முடிவடைந்தது.
16 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,026 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,024 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 24 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 27 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 36 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 51 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 6.30 புள்ளிகள் கூடுதலுடன் 19,581.20-இல் தொடங்கி, 19, 491.90 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 19,636.45 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 36.15 புள்ளிகள் (0.18 சதவீதம்) கூடுதலுடன் 19,611.05-இல் நிறைவடைந்தது.