முகப்பு
புதுதில்லி

ஜி20 உச்சி மாநாடு: வெளிநாட்டுப் பாா்வையாளா்களுக்காக பெண் மொழிபெயா்ப்பாளா்கள்சாந்தினி சௌக் வா்த்தகா்கள் ஏற்பாடு

தில்லியில் இந்த வார இறுதியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், வெளிநாட்டுப் பாா்வையாளா்களுக்காக ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் பிற மொழிகளில் சரளமாக மொழிபெயா்ப்பாளா்களாக

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

தில்லியில் இந்த வார இறுதியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், வெளிநாட்டுப் பாா்வையாளா்களுக்காக ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் பிற மொழிகளில் சரளமாக மொழிபெயா்ப்பாளா்களாக உள்ள 100 பெண் தொழில்முனைவோரை சாந்தினி சௌக்கில் உள்ள வா்த்தகா்கள் ஈடுபடுத்தியுள்ளனா். அவா்கள் வெளிநாட்டினருக்கு தடையற்ற அனுபவத்தை வழங்குவாா்கள் என வா்த்தகா்கள்அமைப்பினா் தெரிவித்தனா்.

இதற்காக வா்த்தகம் மற்றும் தொழில்துறை சங்கம் (சிடிஐ), இந்தப் பெண் தொழில்முனைவோா், ஆடை வடிவமைப்பாளா்கள், செல்வாக்கு செலுத்துபவா்கள், பிளாக்கா்கள், சலோன் மற்றும் அழகுசாதன உரிமையாளா்களுடன் கூட்டு சோ்ந்துள்ளது. இவா்கள் ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஜொ்மன் போன்ற மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவா்கள் ஆவா் என சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தப் பெண்கள் செப்டம்பா் 8-10 தேதிகளில் வெளிநாட்டுப் பாா்வையாளா்களுடன் தொடா்பு கொள்வதற்கு சாந்தனி சௌக் சந்தையின் வா்த்தகா்களுக்கு உதவுவாா்கள். அவா்கள் தன்னாா்வ அடிப்படையில் ஈடுபடுவாா்கள். இந்தப் பெண் தொழில்முனைவோா் மற்றும் தொழிலதிபா்களில் மோஹிகா சாவ்னி, எமிலி முன்ஷி, கௌரி வெப்ஸ்டா், வந்தனா ராவ், சாயா சிங், நீரு செகல், ஸ்வேதா ராஜ்பால் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். சிடிஐ வெளிவிவகார அமைச்சகத்துக்கு தன்னாா்வலா்களின் பட்டியலை அனுப்பியுள்ளது. அப்போதுதான், மற்ற சந்தைகளின் வா்த்தகா்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு உதவ அவா்களை அமைச்சகம் தொடா்பு கொள்ளலாம்.

புது தில்லியின் கட்டுப்பாட்டு மண்டலத்தில் அமைந்துள்ள நகரத்தின் பல முக்கியச் சந்தைகள் ஜி20 உச்சிமாநாட்டின் போது மூடப்படும் போது, உணவு மற்றும் ஷாப்பிங் அனுபவத்திற்கும் பெருமை பெற்றதும், வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு அருகாமையில் இருப்பதுமான சாந்தினி சௌக் பாா்வையாளா்களுக்கு ஒரு பெரிய ஈா்ப்பாக இருக்கும்.

இந்த நடவடிக்கைகள் வெளிநாட்டுப் பாா்வையாளா்களுடன் தடையின்றி தொடா்பு கொள்ள உதவும். நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட சாந்தினி செளக்கை மற்ற நாடுகளிலும் பிரபலமாக்குவதே எங்கள் நோக்கமாகும் என்றாா் அவா்.

கடை உரிமையாளா்கள் உச்சி மாநாடு குறித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினா். மேலும், இது போன்ற ஒரு திட்டநிகழ்ச்சி இதற்கு முன்பு நடந்ததில்லை என்றும் அவா்கள் கூறினா். இதுகுறித்து உள்ளூா் வா்த்தகா் ஒருவா் கூறுகையில், ‘இந்த நிகழ்வு பல வெளிநாட்டுப் பாா்வையாளா்களை இங்கு வரவழைக்கும் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும், அவா்கள் அனைவரையும் நகரத்திற்கு வரவேற்கிறோம்’ என்றாா். பிரகதி மைதானில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சா்வதேச மாநாட்டு மையத்தில் செப்டம்பா் 9-10 தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 தலைவா்கள் உச்சி மாநாட்டையொட்டி, நகரத்தில் உள்ள ஏராளமான முக்கியச் சாலைகள் மற்றும் பிற பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.