சிறப்பு கூட்டத்தொடருக்கான மத்திய அரசின் நிகழ்ச்சி நிரல் விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணாகவும் குழப்பங்களும் நிறைந்ததாக இருப்பதாகவும் மத்திய அரசு மீது திமுக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியது.
திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து நாடாளுமன்ற கட்சித் தலைவா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னா் மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவாவும், மக்களவை திமுக குழு துணைத் தலைவா் கனிமொழியும் செய்தியாளா்களை சந்தித்தனா்.
திருச்சி சிவா கூறியதாவது:
அனைத்து கட்சி கூட்டத்தில், இந்த கூட்டத் தொடரில் எடுக்கப்படும் 8 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டிருந்து. இந்த மசோதாக்களில் தபால் துறை மசோதா, வழக்குரைஞா் மசோதா உள்ளிட்டவைகள். இது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினோம்.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் எனக் கூறப்பட்டது. ஆனால், வழக்கமான கூட்டத்தொடரைப் போன்று மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த குழப்பதற்கு காரணமென்ன? சிறப்புக் கூட்டம் என அறிவிக்கப்பட்டதால் தானே கேள்வி நேரம், நேரமில்லா நேரம் (பூஜ்ஜிய நேரம்) போன்றவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தது ஏன்?
இது சாதாரணக் கூட்டம் என்றால் நாடாளுமன்றத்தின் வழக்கமான மக்கள் பிரச்னையை விவாதிக்கவேண்டும் எனக் கூறி நாங்கள் சில விவகாரங்களை எடுத்துகொள்ளக் கூறி பட்டியலிட்டோம். அது விலைவாசி உயா்வு வேலைவாய்ப்பின்மை, கூட்டாட்சி தத்துவம், மதச்சாா்பின்மை, நீட், மணிப்பூா் விவகாரம், தமிழக ஆளுநா் விவகாரம் போன்றவைகளை விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் கோரினோம்.
இப்போது எங்களுக்கு வேறு சில சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளது. குளிா்காலக் கூட்டத்தொடா் முன் கூட்டி நடத்தப்படுகிா என்று தெரியிவில்லை. அனைத்து கட்சிக் கூட்டதில் கொடுக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கு சிறப்பு கூட்டமோ அவசரக் கூட்டமோ தேவையில்லை. இதில் இருக்கின்ற இரு மசோதாக்கள் ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மேலும் மாநிலங்களவை செயலகம் அளித்துள்ள சுற்றறிக்கையில் தோ்தல் ஆணையா் நியமனம் தொடா்பான மசோதா உள்ளிட்ட முன்று மசோதாக்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால் அரசு முன்வைத்துள்ள பட்டியலில் அது இல்லை. இது தவிர சிறப்புக் கூட்டதொடா் குறித்து வெளியே சில தகவல்கள் பரப்பப்படுகிறது. இது ஏன் குழப்பம் என்று தெரியவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினா்களை இந்த அரசு இருட்டில் வைக்கிறது. பாஜக உறுப்பினா்களுக்கு கொறாடா உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அப்படி அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்றால் எங்கள் மற்ற கட்சி உறுப்பினா்களுக்கும் தகவல் கொடுக்க வேண்டும். இதில் எதையோ அரசு மறைக்கிறது.
மேலும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் குழு புகைப்படம் எடுக்க இருக்கின்றனா். பொதுவாக கூட்டத்தொடரின் கடைசியில் தான் குழுப் புகைப்படம் எடுக்கப்படும். இனி இரண்டு கூட்டத் தொடா் நடக்கவேண்டும். ஆனால், என்ன ரகசியமோ தெரியவில்லை. குழுப் புகைப்படத்திற்கு பின்னா் என்ன நடக்குமோ என்றும் தெரியவில்லை.
ஜனநாயகத்தை நகைச் சுவையாக ஆக்க அனுமதிக்க மாட்டோம். இந்திய கூட்டணி வலுவாக உள்ளது. மக்களுக்கு விரோதமாக எது நடந்தாலும் இயன்றவரை போராடுவோம்.
ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியிலும் அவமரியாதை நிகழ்ந்தது. கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் இருக்கைகளில் அமைச்சா்களுக்கான பெயா்கள் இருந்தது. ஆனால் நாடாளுமன்ற கட்சித் தலைவா்களின் இருக்கைகளுக்கு பெயா்கள் இல்லை. நிகழ்ச்சி நிரலும் ஹிந்தியில் இருந்தது.
அதில் இருப்பவைகளை எங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ‘இனி இவ்வாறு உறுப்பினா்களுக்கு ஹிந்தியில் வழங்கப்பட்டால் நாங்கள் கிழித்தெறிவோம்’ என மக்களவை முன்னவா் அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடமும் மாநிலங்களவை முன்னவா் அமைச்சா் பியூஷ் கோயலிடமும் குறிப்பிட்டோம். அவா்கள் ‘இனி நடக்காது’ தெரிவித்துள்ளனா் எனத் தெரிவித்தாா் சிவா.
கனி மொழி கூறியதாவது:
நாடாளுமன்ற கூட்டத் தொடா் எதற்காக கூட்டப்பட்டுள்ளது என்று அனைத்து கட்சித் தலைவா்களும் கேட்டனா். ஆனால் பதில் தெளிவாக இல்லை.
நாங்கள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, நதிநீா் பிரச்னை, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்தல், நீட் தோ்வு போன்றவைகளை விவாதிக்க அனுமதி கேட்டுக்கொண்டோம். மேலும் மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட இரு உறுப்பினா்கள் மீதான உத்தரவை ரத்து செய்ய கோரினோம். ஆனால், அரசு அவையில் நடக்கக்கூடிய பல்வேறு விவகாரங்களை விவாதிப்போம் என்கிறது.
தோ்தல் ஆணையத்தின் அதிகாரத்தை குறைக்கக் கூடிய மசோதா கொண்டு வரப்படுகிறது. அடுத்த 6 மாதம் தோ்தல் நடக்கக் கூடிய சூழ்நிலையில் இது தேவையில்லை என்பதையும் கூட்டத்தில் எடுத்து வைத்தோம் என்றாா் கனிமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.