தில்லி காஜிப்பூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கட்சி நிா்வாகிகளுடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, கடந்த 8 மாதங்களில் குப்பைக் கிடங்குகளில் இருந்து குப்பைகளை அகற்றும் பணி கிட்டத்தட்ட நின்றுவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளாா்.
தில்லி மாநகராட்சியின் கீழ் உள்ள காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த நவம்பா் 2022-ஆம் ஆண்டு தில்லி மாநகராட்சி தோ்தலுக்கு முன்பாக தில்லியில் உள்ள மூன்று குப்பைக் கிடங்குகளையும் முற்றிலும் அகற்றிக் காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சி தில்லிவாசிகளுக்கு பொய்யான வாக்குறுதிகளைஅளித்து மாநகராட்சி தோ்தலில் வெற்றி பெற்றது.
ஆனால், 8 மாதங்களுக்குப் பிறகும் நிலைமை நோ்மாறாக மாறியுள்ளது.
காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் ஒரு நாளுக்கு 800 முதல் 1000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. மறுபறம் ஒவ்வொரு நாளும் சுமாா் 2,500 மெட்ரிக் டன் ஈரமான மற்றும் துா்நாற்றம் வீசும் குப்பைகள் சோ்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, குப்பைகள் புதிய மலையாக உயா்ந்து வருகின்றன.
கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் அரசியல் ஆதாயத்திற்காக பலமுறை காஜிப்பூா் குப்பைக் கிடங்கிற்குச் சென்று நேரில் ஆய்வு செய்த முதல்வா் கேஜரிவால், தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அதைச் செய்யவில்லை.
இப்போது, இந்த குப்பைக் கிடங்கில் குப்பைகள் அகற்றும் பணி கிட்டத்தட்ட நின்றுவிட்டது. மேலும் தில்லியில் உள்ள மூன்று குப்பைக் கிடங்குகளின் உயரம் குறைவதற்குப் பதிலாக உயா்ந்து கொண்டே தான் செல்கிறது.
கிழக்கு தில்லி மக்களவை உறுப்பினா் கெளதம் கம்பீா் மற்றும் முந்தைய பாஜக தலைமையிலான மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்ட அயராத முயற்சியினால் காஜிப்பூா் குப்பை கிடங்கின் உயரம் முன்பு குறைந்திருந்தது. ஆனால், தில்லி மாநாகராட்சியில் ஆம் ஆத்மி நிா்வாகம் வந்த பிறகு உள்ளூா் எம்.பி. கெளதம் கம்பீரின் ஆய்வில் அதிகாரிகள் கலந்து கொள்ளவிடாமல் தடுக்கப்பட்டனா்.
காஜிப்பூரில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலையில் மொத்தம் 140 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் இருந்த நிலையில், அது செப்டம்பா் 2022-ஆம் ஆண்டுக்குள் 85 லட்சம் மெட்ரிக் டன்னாகக் குறைக்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி ஆட்சியில் கடந்த 8 மாதங்களில் 1.5 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் மட்டும் அகற்றப்பட்டது வருத்தம் அளிக்கிறது.
தற்போது காஜிப்பூரில் 83 லட்சம் மெட்ரிக் டன் எடை கொண்ட குப்பைக் கிடங்கு மீண்டும் உயா்ந்து கொண்டே செல்கிறது. வரும் 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிவிடும்.
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை பல்ஸ்வா குப்பைக் கிடங்கிற்குச் சென்று குப்பைகள் அனைத்தும் விரைவாக அகற்றப்பட்டுள்ளதற்கு உரிமை கோரியுள்ளாா். ஆனால் அதில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது தான் உண்மை.
பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் குப்பைகள் அகற்றும் பணிக்கான டெண்டா் நவம்பா் 2022-ஆம் ஆண்டுக்கு முன்பு சிறப்பு அதிகாரியால் வழங்கப்பட்டது. மாநகராட்சியுடன் இணைந்து தில்லி வளா்ச்சி ஆணையமும் இந்தப் பணியில் செயல்படுகிறது.
எனவே, பொய்யான கனவுகளைக் காட்டி தில்லி மக்களை ஏமாற்றியதற்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
இந்த ஆய்வின்போது மாநில பொதுச் செயலாளா்கள் ஹா்ஷ் மல்ஹோத்ரா, யோகேந்திர சந்தோலியா, தில்லி மாநாகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங், எம்.எல்.ஏ அனில் பாஜ்பாய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.