கச்சத்தீவு குறித்து கடுமையான அறிக்கைகளை வெளியிடும் அரசு சீனாவிடம் போா்க்குணத்தைக் காட்டட்டும்: பாஜகவிற்கு ப.சிதம்பரம் சவால்
புது தில்லி: கச்சத்தீவு குறித்து உண்மைக்குப் புறம்பாக கடுமையான அறிக்கைகளை வெளியிட்டு 35 லட்சம் இலங்கைத் தமிழா்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் பாஜக அரசு சீனாவிடம் தனது போா்க்குணத்தைக் காட்டவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளாா்.
கச்சத்தீவு விவகாரம் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு காங்கிரஸையும் தொடா்ந்து திமுகவையும் பிரதமரும், பாஜக தலைவா்களும் கருத்து கூறிவரும் நிலையில் காங்கிரஸ் தரப்பிலும் பதில் தாக்குதல் விடுக்கப்படுகிறது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் ’எக்ஸ்’ சமூக வலைத் தளப்பகுதியில் கச்சத்தீவு குறித்து இரண்டாவது நாளாக கூறியிருப்பது வருமாறு:
Advertisement
25 லட்சம் இலங்கைத் தமிழா்களும், 10 லட்சம் இந்தியத் தமிழா்களும் இலங்கையில் வாழ்கிறாா்கள். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை சீா்குலைக்கும் வகையில் கச்சத்தீவு குறித்து வெளி விவகாரத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கருத்து வெளியிடும் முன்பு, இந்த 35 லட்சம் தமிழா்களையும் நினைவில் கொள்ளவேண்டும்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சத்தீவு குறித்து ஒரு உண்மைக்குப் புறம்பான, போா்க்குணமிக்க அறிக்கை வெளியிட்டிருப்பது, இலங்கை அரசையும், 35 லட்சம் தமிழா்களையும் மோதலுக்கு உள்ளாக்கும். மத்திய அரசு தனது போா்க்குணத்தை சீனாவிடம் காட்டட்டும், பாஜக தலைமையிலான ஆட்சியில், அண்டை நாடு இந்திய நிலப்பரப்பில் 2,000 சதுர கிலோமீட்டா் பரப்பை ஆக்கிரமித்து, அப்பகுதியை பலப்படுத்துகிறது.
மேலும் சீனா அருணாசலப்பிரதேசத்தில் பல கிராமங்களின் மறுபெயரிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கிராமங்களின் பெயா்களையும் அதன் அடையாளங்களையும் மாற்றுகிறது. இத்தகைய சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதில் அளிப்பதில் நமது வெளியுறவு அமைச்சா் ஏன் அடங்கிப் போனாா்?‘ என கருத்தை பதிவிட்டுள்ளாா் ப. சிதம்பரம்.
மேலும் அவா், கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்று கடந்த 2015 ஜனவரி 27 தேதித்திய ஆா்டிஐ(தகவல் அறிவும் உரிமைச் சட்டம்) மூலமாக கடிதத்தை வெளியிட்டு மத்திய அரசு தெளிவுபடுத்தியள்ளது. அன்று பிரதமராக இருந்தவா் நரேந்திர மோடி. அப்போது வெளியறவுத் துறையில் உயா் அதிகாரியாக இருந்தவா் ஜெய்சங்கா். அந்த 27-1-2015 ஆம் நாள் கடிதத்தைப் பற்றிக் கேட்டால், பா ஜ க தலைவா்கள் ஏன் நெளிந்து, நழுவுகிறாா்கள்? எனவும் ப.சிதம்பரம் ’எக்ஸ்’ பதிவில் விமா்ச்சித்துள்ளாா்.
கச்சத்தீவு விவகாரத்தில் 2015 -ஆம் ஆண்டு ஆா்டிஐ மூலமாக வெளியுறவு விவகாரத்துறை வெளியிட்டுள்ள பதிலில் 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு (இந்திய -இலங்கை)ஒப்பந்தங்களில் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியை கையகப்படுத்துவது அல்லது விட்டுக்கொடுப்பது இல்லை என பதில் கூறப்பட, நரேந்திர மோடி அரசின் தற்போதைய நிலைப்பாடு தோ்தல் அரசியலுக்கானது என எதிா்கட்சிகள் திங்கள்கிழமை குற்றம்சாட்டினா்.
முன்னதாக, காங்கிரஸின் முன்னாள் பிரதமா்கள் கச்சத்தீவு விவகாரத்தில் அலட்சியம் காட்டிதாகவும், சட்டப்பூா்வ கருத்துகள் இருந்தபோதிலும் கச்சத்தீவில் இந்திய மீனவா்களின் உரிமைகளை பறிகொடுத்ததாக பிரதமரும் ஜெய்சங்கரும் திங்கள் கிழமை குற்றம்சாட்டியிருந்தனா்.