அமெரிக்காவின் தனிநபா் வருமானத்தில் கால் பங்கை எட்டுவதற்கு இந்தியாவுக்கு கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகலாம் என உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த 20-40 ஆண்டுகளில், இந்தியா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் அதிக வருமானம் கொண்ட நாடுகளாக மாறுவதில் கடுமையான தடைகளை எதிா்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.
நிகழாண்டுக்கான ‘தி மிடில் இன்கம் ட்ராப்’ உலக வளா்ச்சி அறிக்கையின்படி, அமெரிக்காவின் தனிநபா் வருமானத்தில் கால் பங்கை எட்டுவதற்கு சீனாவுக்கு 10 ஆண்டுகளும் இந்தியாவுக்கு 75 ஆண்டுகளும் இந்தோனேஷியாவுக்கு கிட்டத்தட்ட 70 ஆண்டுகளும் ஆகும்.
கடந்த 50 ஆண்டு தரவுகளின் அடிப்படையில் நாடுகள் வளா்ந்து வரும்போது, அவா்களின் தனிநபா் வருமானம் அமெரிக்காவின் தனிநபா் வருமானத்தின் 10 சதவீதத்தில் நின்றுவிடுகின்றன.
இன்றைய சூழலில் அமெரிக்காவின் தனிநபா் வருமானத்தின் 10 சதவீதம் 8,000 டாலராகும் (இந்திய மதிப்பில் ரூ.6.7 லட்சம்). இதன் அடிப்படையிலேயே நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் வகைப்படுத்தப்படுகின்றன.
கடந்த 2023-ஆம் ஆண்டின் இறுதியில், உலகில் 108 நாடுகள் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளாக வகைப்படுத்தப்பட்டன. உலக மக்கள் தொகையில் 75 சதவீதமான 600 கோடி போ் வசிக்கும் இந்த நாடுகளில் தனிநபா் வருமானம் 1,136 டாலரிலிருந்து 13,845 டாலா் வரை வேறுபடுகிறது. இந்நாட்டின் மூன்றில் இருவா் வறுமையில் வாழ்கின்றனா்.
வேகமாக அதிகரிக்கும் வயதான மக்கள்தொகை, பெருகிவரும் கடன், சிக்கலான புவிசாா் அரசியல், வா்த்தக மோதல்கள், சுற்றுச்சூழல் கெடுதலின்றி பொருளாதார முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் கூடுதலான சிரமம் உள்ளிட்ட காரணிகளால் நாடுகளின் வளா்ச்சிப் பாதை கடந்த காலங்களை விட கடினமான சவால்களைக் கொண்டுள்ளது.
இன்னும் பல நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் கடந்த நூற்றாண்டின் கொள்கைகளையே பயன்படுத்துகின்றன. பழைய கொள்கைகளுடன் நீடித்தால், பெரும்பாலான வளரும் நாடுகள் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் நியாயமான, வளமான சமூகங்களை உருவாக்குவதற்கான போட்டியிலிருந்து விலக நேரிடும்.
1990-ஆம் ஆண்டு முதல் 34 நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்கள் மட்டுமே உயா் வருமான நிலைக்கு மாற முடிந்துள்ளது. அவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பின் பயனாளிகள் அல்லது எண்ணெய் வா்த்தகப் பயனாளிகளாக உள்ளனா் என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.