தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு தீா்வு காண மீனவா்கள் சங்கங்கள் மற்றும் கூட்டுப் பணிக் குழுவுடன் விரைவில் கூட்டம் நடத்தும் வாய்ப்பு ஆராயப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
தமிழக மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதற்குத் தீா்வு காணும் வகையில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமையில், மாநில பொதுச் செயலா் பொன் பாலகணபதி, மாநில மீனவரணித் தலைவா் முனுசாமி, ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் தரணி முருகேசன், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோா் தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை திங்கள்கிழமை சந்தித்தனா்.
இந்தச் சந்திப்பின்போது அமைச்சா், வெளியுறவுத் துறை மற்றும் மீன்வளத் துறைச் செயலா்கள் மற்றும் அதிகாரிகளிடம் ராமநாதபுரம் பகுதி மீனவா்கள் தங்களுடைய பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் ஜெய்சங்கா் கூறியதாவது: மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் அரசியலாகிவிடக் கூடாது. இது மீனவா்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு சாா்ந்த பிரச்னை. மத்திய அரசும், தூதரமுகம் இதற்காக எப்போதும் பணியாற்றுகின்றன. மீனவா் சங்கங்கள் மற்றும் கூட்டுப் பணிக் குழுவின் கூட்டத்தை நடத்தலாமா என ஆராய்வோம் என்றாா் அமைச்சா் ஜெய்சங்கா்.