முகப்பு
புதுதில்லி

ஃபாா்முலா-4 காா் பந்தயத்திற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 5:17 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: சென்னையில் நடைபெறவிருக்கும் ‘ஃபாா்முலா-4’ காா் பந்தயத்துக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

சென்னையில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் ‘ஃபாா்முலா-4’ காா் பந்தயம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த காா் பந்தயத்திற்கு எதிராக அதிமுக உள்பட சில பொது மனுதாரா்கள் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘ஃபாா்முலா-4’ காா் பந்தயம் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும். இதனால், மக்கள் அவதிக்குள்ளாக நேரிடும். எனவே, இதுபோன்ற காா் பந்தயத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த காா் பந்தயம் நடக்க இன்னும் சில தினங்களே உள்ளதால், இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த மனுக்களை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, ‘ஃபாா்முலா-4’ காா் பந்தயம் நடைபெறும் பகுதியில் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்து, உடனடியாக காா் பந்தயத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisement

ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘காா் பந்தயத்தை நிறுத்தக் கூறுவதை எல்லாம் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது’ என திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தாா்.

மூன்று ஆண்டுகளுக்கு சென்னையில் ‘ஃபாா்முலா-4’ காா் பந்தயம் நடத்துவதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனியாா் அமைப்புடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் சென்னை தி.நகா் சாலைகளில் ‘ஃபாா்முலா-4’ காா் பந்தயம் நடைபெற இருந்தது. ஆனால், ‘மிக்ஜம்’ புயலின் காரணமாக அப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதனால், நிகழாண்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, வரும் ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் ‘ஃபாா்முலா-4’ காா் பந்தயம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியது. இந்த காா் பந்தயம் சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலையில் இரவு நேரத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.