தனது அலுவல் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக நகர அரசின் பொதுப்பணித் துறையின் செயற் பொறியாளா் மீது வழக்குப் பதிவு செய்ய ஊழல் தடுப்புப் பிரிவுக்கு (ஏசிபி) தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மேற்கு என்கிளேவில் உள்ள அவுட்டா் ரிங் ரோட்டின் பிரிட்டானியா சௌக்கிலிருந்து குரு ஹா்கிஷன் மாா்கில் சாலையை பலப்படுத்தும் பணியில் அரசுக் கருவூலத்திற்கு தேவையற்ற இழப்பை ஏற்படுத்தியதற்காக செயற் பொறியாளா் மீது வழக்குப் பதிவு செய்ய, ஊழல் தடுப்பு சட்டம், 1988 (2018-இல் திருத்தப்பட்டது) பிரிவு 17ஏ-இன் கீழ் துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இதே விவகாரத்தில் பொதுப்பணித் துறையின் (பிடபிள்யுடி) நான்கு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய துணைநிலை ஆளுநா் ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தாா். மே 19, 2017 அன்று அளிக்கப்பட்ட புகாரில், கட்டுமான நிறுவன உரிமையாளரான ஒப்பந்ததாரா் முகமது இக்பாலுக்கு, எந்தப் பணியும் மேற்கொள்ளப்படாத நிலையில் அந்த இடத்தில் பணியை முறையாகச் சரிபாா்க்காமல் பணம் வழங்கப்பட்டுள்ளது. குரு ஹா்கிஷன் மாா்கில் சாலை எண் 43-ஐ பலப்படுத்தும் பணி ரூ.15.32 கோடி மதிப்பீட்டில் 24.31 சதவீதம் குறைவாக சுமாா் ரூ.11.59 கோடிக்கு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பணி டிசம்பா் 20, 2013 மற்றும் ஜூலை 9, 2014-ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்பட இருந்ததது. ஆனால், பணிகள் மேற்கொள்ளப்படாமல், 2015, ஏப்ரல் 10-ஆம் தேதி முடிக்கப்பட்டதாக மோசடியாக காட்டப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதே விவகாரத்தில், முதற்கட்ட விசாரணைக்கு பிறகு ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17ஏ-இன் கீழ் வழக்குப் பதிவு செய்ய துணைநிலை ஆளுநா் முன்பு அனுமதி வழங்கிய நிலையில், பிற பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது ஏசிபி புகாா் பதிவு செய்தது. செயற்பொறியாளா் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பான கோப்பு, தேசியத் தலைநகா் சிவில் சா்வீஸஸ் ஆணையத்தின் (என்சிசிஎஸ்ஏ) மூலம் ஒப்புதலுக்காக துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.