முகப்பு
புதுதில்லி

தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்கும் வழக்குகளில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்கும்போது அதை எந்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என்பது குறித்து புதிதாக முடிவெடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை உச்சநீதிமன்றம்...

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 7:30 AM
பகிர்:

சொத்துக் குவிப்பு வழக்குகளில் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்கும்போது அதை எந்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் 
என்பது குறித்து புதிதாக முடிவெடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. 

இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஹ்ரிஷிகேஷ், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. 

அதன் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ""தாமாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளை பட்டியலிடுவதை பரிசீலிப்பவர் தலைமை நீதிபதிதான் எனக் கூறுவது பொருத்தமானது என கருதுகிறோம். 

Advertisement

இதுபோன்ற வழக்கை தலைமை நீதிபதி தாமாக விசாரிக்கலாம் அல்லது வேறு நீதிபதி விசாரிப்பது சரியானது என கருதினால் அவருக்கு ஒதுக்கலாம். அதன் பிறகு தகுதிக்கு ஏற்ப வழக்கு விசாரிக்கப்படலாம். இந்த உத்தரவு, தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு எதிரான கருத்தாக கருதப்படக் கூடாது,'' என்று கூறியுள்ளனர். 

முன்னதாக விசாரணையின்போது தமிழ்நாட்டில் அமைச்சர்கள் எதிர்கொள்ளும் ஊழல் வழக்குகள் பலவற்றில் அவர்கள் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு விடுகிறார்களே என்று நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா வியப்பு தெரிவித்தார். 

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர் விவேக் சிங்குடன் மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, சித்தார்த் லூத்ரா ஆகியோர் ஆஜராகி வாதிடுகையில், "இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையின்படி, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது உரிய முன் அனுமதியை தனி நீதிபதி பெறவில்லை என்பது தெளிவாகிறது' என்றனர்.

உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் தரப்பில் மூத்த வழக்குரைஞர்  ராகேஷ் துவிவேதி ஆஜராகி, "பொருந்துகின்ற விதிகளின்படி வழக்கை விசாரிக்க அனுமதி பெறப்பட்டிருக்கிறது' என்று வாதிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.