ரோஹிணியில் நோய் ஆய்வககட்டடத்தில் தீ விபத்து
வடக்கு தில்லியின் ரேஹிணியில் உள்ள நோய் ஆய்வகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
புது தில்லி: வடக்கு தில்லியின் ரேஹிணியில் உள்ள நோய் ஆய்வகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி தீயணைப்பு சேவைத் துறையின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த நோயியல் ஆய்வகம் உள்ள கட்டடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. முன்னதாக, இந்த தீ விபத்து குறித்து நள்ளிரவு 12.45 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 10 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீயை முழுவதுமாக அணைக்க இரண்டு மணி நேரத்திற்கும் மேலானது. மின்தூக்கி இயக்கும் பகுதிக்கு அருகே ஏற்பட்ட இந்த தீயில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடா்பான மேலதிக விசாரணைகளுக்காக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.