பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மைனா் சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யக் கோரிய மனுவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை முடித்துவைத்தது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி, நகர காவல் துறை மற்றும் சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ ஆகியோா் தரப்பில், அந்தப் பதிவு நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட சமா்ப்பிப்புகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், வழக்கை பைசல் செய்தது.
இந்த விவகாரம் பொறுப்புத் தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பிஎஸ் அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தியின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தரன்னம் சீமா, ‘சம்பந்தப்பட்ட ட்வீட் பதிவு இந்தியாவில் நிறுத்திவைக்கப்பட்டதுடன், சா்வதேச அளவில் நீக்கப்பட்டுவிட்டது’ என்றாா்.
சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ (முந்தைய ட்விட்டா்) தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சம்பந்தப்பட்ட ட்வீட்டை ராகுல் காந்தி நீக்கிவிட்டாா் என்பதை நீதிமன்றத்தின் முன் உறுதிப்படுத்தினாா்.
தில்லி காவல் துறை தரப்பில் ஆஜரான தில்லி அரசின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, இந்த விவகாரத்தில் 2021-இல் ராகுல் காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை இன்னும் நடைபெற்றுவருவதாகத் தெரிவிக்கும் நிலவர அறிக்கை குறித்து நீதிபதிகள் அமா்விடம் சமா்ப்பித்தாா். மேலும், ‘பிரதான குற்றமான பலாத்காரம் நிரூபிக்கப்படவில்லையெனில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரின் அடையாளத்தை வெளியிட்ட செயல் ஒரு குற்றமாகாது. மேலும், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் ராகுல் காந்தி மூலம் வெளிப்படுத்திய விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினாா்.
இதையடுத்து, வழக்கின் தரப்பினரின் சமா்ப்பிப்புகளைக் குறிப்பிட்ட உயா்நீதிமன்றம், மனுவில் உள்ள பிராா்த்தனைகள் திருப்திகரமாக இருப்பதாகவும், மனு முடித்துவைக்கப்படுவதாகவும் கூறியது. மேலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) வேண்டுகோளின்பேரில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
பாலியல் வன்ரகொடுமையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டத்தின் 228ஏ பிரிவின் கீழ் குற்றமாகும். மேலும், இந்தப் பிரிவில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021, ஆகஸ்ட் 1-ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த 9 வயது சிறுமி, தனது பெற்றோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை ராகுல் காந்தி தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டாா். அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், தென் மேற்கு தில்லியின் பழைய நங்கல் கிராமத்தில் உள்ள தகன மைய பூசாரியால் அச்சிறுமி தகனம் செய்யப்பட்டதாகவும் சிறுமியின் பெற்றோா் குற்றம்சாட்டியிருந்தனா்.
ராகுல் காந்தியின் பதிவு சமூக ஊடக தளத்தால் தடை செய்யப்பட்டது. மேலும், இந்தப் பதிவைத் தொடா்ந்து, ராகுல் காந்தியின் கணக்கு சமூக ஊடகத் தளத்தால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு பின்னா் மீட்டெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ட்விட்டா் என அழைக்கப்படும் ‘எக்ஸ்’-இல் பெற்றோருடன் இருக்கும் சிறுமியின் புகைப்படம் வெளியிட்டதன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி சமூக ஆா்வலா் மகரந்த் சுரேஷ் மட்லேகா் 2021-இல் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை தற்போது உயா்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.