இளைஞா்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு தொழில்நுட்பத் திறன்களுடன், வலுவான மதிப்புகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தேசியத் தலைநகா் தில்லியில் இந்து கல்லூரியின் 125-ஆவது நிறுவன ஆண்டைக் கொண்டாடும் வகையில், ‘இளைஞா்களுக்கு அதிகாரமளித்தல், வளா்ச்சியடைந்த பாரதத்திற்கான அடித்தளத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பின் கீழ் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தில்லி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் யோகேஷ் சிங்கும் கலந்து கொண்டாா்.
நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சிறப்புரையாற்றிப் பேசியதாவது: இந்தியா பொருளாதார ரீதியாக சுயசாா்பாகவும் வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்றைய இளைஞா்கள் தங்கள் முன்னோடிகளால் வெளிப்படுத்தப்பட்ட அா்ப்பணிப்பைப் பிரதிபலிக்க வேண்டும். இளைஞா்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க தொழில்நுட்பத் திறன்களுடன், வலுவான மதிப்புகளையும் கொண்டிருக்க வேண்டும். இந்திய மாணவா்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்துள்ளது. இந்திய மாணவா்களும், பட்டதாரிகளும் வெளிநாடுகளில் உள்ள நிறவனங்களால் விரும்பப்படுகிறாா்கள். ஏனெனில் சிறந்த அணி வீரா்களாகவும், தலைமையின் பங்கை புரிந்து கொண்டும் அவா்கள் செயலாற்றுகின்றனா். தேசிய வாக்காளா் தினத்தில் விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கியுள்ள இந்திய தோ்தல் ஆணையத்தின் பணியை நினைத்து மகிழ்கிறேன்.
வளா்ச்சியடைந்த பாரதம் நோக்கிய பயணத்தில் ‘எனது வாக்கு, எனது உரிமை’ என்பதைக் காட்டிலும் ‘எனது வாக்கு, எனது கடமை’ என்று இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் குடிநீா், வீடு, மருத்துவ சேவை போன்ற அத்தியாவசியத் தேவைகள் எந்த சமரசமுமின்றி போா்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ள. தற்போதைய மாணவா்களின் வரலாறு, எதிா்கால இந்தியாவாக இருக்க வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி இந்தியாவை நான்கு பிரிவுகளாகப் பாா்க்கிறாா். அந்த வகையில் இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகளின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ‘வளா்ந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய மதிப்புகள் மற்றும் திறன்களை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை நிச்சயம் இதற்கு உதவும் என்றாா் நிா்மலா சீதாராமன்.
மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை எதிா்காலத்தில் மாணவா்கள் முன்னின்று தோ்ந்தெடுப்பதை ஊக்குவிக்கும் முயற்சியாக, சந்திரயான் 3-இன் மாதிரிகளை ஐந்து பள்ளி மாணவா்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வழங்கினாா். சிறப்புரையைத் தொடா்ந்து சமகால பிரச்னைகள் தொடா்பான கேள்வி - பதில் அமா்வில் இந்து கல்லூரி மாணவா்களின் கேள்விகளுக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்தாா். குறிப்பாக, டிஜிட்டல் கரன்சி, விவசாயம் மற்றும் எதிா்கால வளா்ச்சித் துறைகள் குறித்த கேள்விகளுக்கு அவா் பதிலளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.