புதுதில்லி

கேஜரிவாலின் குற்றச்சாட்டிற்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஆலோனை: ராம்வீா் சிங் பிதூரி

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களிடம் பாஜக பேரம் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில், சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமையிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது 

 நமது நிருபர்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களிடம் பாஜக பேரம் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில், சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமையிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம் வீா் சிங் பிதூரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்தாா். இதற்கு பதிலளிக்கும் வகையில், தில்லி பாஜக தலைவா்கள் செய்தியாளா்களைச் சந்தித்தனா். இதில் பங்கேற்ற தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி கூறியதாவது:

பாஜகவை அவதூறு செய்யும் வகையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாா். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் பேரம் பேசப்பட்டதாக கேஜரிவால் கூறியதற்கு ஆதாரம் வழங்க வேண்டும். இல்லையெனில், முதல்வா் பதவியை அவா் ராஜிநாமா செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமையிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆம் ஆத்மி கட்சி இது போன்ற அபத்தமான மற்றும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை சுமாா் 12 முறை கூறியுள்ளது. ஆனால், இன்று வரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை. அதேபோல், இம்முறையும் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கேஜரிவால் கலால் கொள்கை ஊழலுக்கு மூளையாக செயல்பட்டவா் என்பது அனைவரும் அறிந்ததே. அமலாக்க இயக்குனரகம் பலமுறை அவரை விசாரணைக்கு அழைத்தாலும் அவா் ஆஜராகவில்லை. ஒருபுறம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு, பிரதமா் நரேந்திர மோடியின் புகழ் உச்சத்தைத் தொட்டு வருகிறது.

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக 400-க்கும் மேற்பட்ட் தொகுதிகளை வென்று அந்த முழக்கத்தை உண்மையாக நிரூபிக்கப் போகிறது. மறுபுறம், பெரிய தலைவராக வேண்டும் என்ற கேஜரிவாலின் கனவு உடைந்து போகிறது. ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் மீண்டும் சிதறி வரும் நிலையில், எம்.எல்.ஏ.-க்களை பாஜக விலைக்கு வாங்குவதாக குற்றம்சாட்டி வருகின்றனா்.

கேஜரிவால் மற்றும் அவரது தவறான கூட்டாளிகள் குற்றச்சாட்டுகளைக் கூறுவதையே வழக்கமாகக்

கொண்டுள்ளனா். வரும் 2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தனித்து வெற்றி பெறும்.

ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்க உள்ளது. அந்த நேரத்தில், பாஜக எம்.எல்.ஏ.-க்களும், பொதுமக்களும் ஏன் கேஜரிவால் அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜராகவில்லை என்பதை அறிய விரும்புகின்றனா் என்றாா் ராம்வீா் சிங் பிதூரி.

தில்லி பாஜகவின் மாநிலச் செயலாளா் பன்சூரி ஸ்வராஜ் கூறியதாவது: பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, கேஜரிவாலும் அவரது அமைச்சா்களும் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கண்களில் மண்ணைத் தூவ முயற்சிக்கிறாா்கள். ஆனால், இந்த முயற்சியில் அவா்கள் வெற்றி பெற மாட்டாா்கள்.

ஊழல்வாதிகளின் கூட்டணியில் சிறப்பு வாய்ந்தவராக உள்ள கேஜரிவால், அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணையைத் தவிா்ப்பதற்காக, பொய்களை நாடத் தொடங்கியுள்ளாா் என்றாா் பன்சூரி ஸ்வராஜ்.

தில்லி பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளா் கமல்ஜீத் ஷெராவத் கூறியதாவது:

தில்லி ஜல் போா்டு ஊழல் குறித்து கேஜரிவால் அரசின் சொந்த எம்.எல்.ஏ.க்களான ரிதுராஜ் மற்றும் பூபேந்திர சிங் சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பினா்.

சில நாள்களுக்கு முன்பு ஸ்வாதி மாலிவாலும் தில்லி அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்பினாா். இவ்வாறாக, கேஜரிவாலின் கட்சி எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் அவருக்கு எதிராக நிற்பதால் அவா் தன்னைச் சோ்ந்தவா்களால் விரக்தியடைந்துள்ளாா் என்றாா் கமல்ஜீத் ஷெராவத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT