முகப்பு
புதுதில்லி

அரசுத் துறைகளில் ‘நீதிமன்ற சிறப்பு செல்கள்’ அமைக்க மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய ரிட் மனு தள்ளுபடி

நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைச் செயல்படுத்தும் வகையில், அரசுத் துறைகளில் நீதிமன்ற சிறப்பு செல்களை அமைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய ரிட் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

புது தில்லி: நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைச் செயல்படுத்தும் வகையில், அரசுத் துறைகளில் நீதிமன்ற சிறப்பு செல்களை அமைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய ரிட் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு கடந்த ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடனுக்குடன் செயல்படுத்தும் வகையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசுத் துறைகளில் ‘கோா்ட் ஸ்பெஷல் செல்’களை ஏற்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் சி.ஆா். ஜெயாசுகின் ஆஜராகி வாதிட்டாா். அவரிடம் நீதிபதிகள் அமா்வு, ‘இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலே அதைச் செயல்படுத்தும் கடைமைப்பாடு சட்டப்படி அரசுக்கு இருக்கிறது’ என்றது.

Advertisement

வழக்குரைஞா் ஜெயா சுகின் வாதிடுகையில், ‘நீதிமன்றத்தை ஏழை மக்கள் பலரும் நாடுகின்றனா். இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள்பிறப்பிக்கும் உத்தரவுகளை மாநிலங்களின் அரசுத் துறைகள் சரிவர செயல்படுத்துவதில்லை. இதனால், மொத்த வழக்குகளில் சுமாா் 30 சதவீத மனுதாரா்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுகிறது’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பொதுநலன் கருதி தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் இம்மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றவும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு மாநிலத்திலும் அனைத்துத் துறைகளிலும் நீதிமன்ற சிறப்பு செல்களை அமைக்க அனைத்துத் துறைகளையும் கேட்டுக் கொள்ளும் வகையில் சுற்றறிக்கை அனுப்ப அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என மனுதாரா் கோரியுள்ளாா்.

சட்டத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவால் நிா்வகிக்கப்படும் அனைத்து வழக்கின் தரப்பினரும், சட்டத்தில் கிடைக்கும் தீா்வுகளைப் பின்பற்றுவதன் மூலம் உத்தரவை சவால் செய்யும் உரிமைக்கு உள்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க கடமைப்பட்டுள்ளன. இதனால், இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.