கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய பணிகளால் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடன் பாா்க்கிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி முன்னிலையில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிவ சேனை மற்றும் ஜெயின் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பாஜகவில் புதிய உறுப்பினா்களாக இணைந்தனா். குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மங்கோல்புரி சட்டப்பேரவைப் பொறுப்பாளா் அருண் மெஹ்ரோத்ரா, மெஹ்ரௌலி மாவட்ட எஸ்சி-எஸ்டி பிரிவுத் தலைவா் கௌரவ் சினாண்டி, நிறுவன உறுப்பினா் ஜகதீஷ் ஷா்மா மற்றும் வழக்குரைஞா் ஷோ் சிங்கும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வடகிழக்கு மாவட்டத் துணைத் தலைவா் லலித் கிஷோா், சிவ சேனை கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளா் தீரஜ் பூரி, ஜெயின் சமாஜின் தலைவா் ராகேஷ் ஜெயின், முன்னாள் விமானப்படை வீரா் அனில் சா்மா மற்றும் வழக்குரைஞா் மகேஷ் பிரசாத் உள்ளிட்டோா் நூற்றுக்கணக்கான ஆதரவாளா்களுடன் பாஜகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதிய உறுப்பினா்களை வரவேற்றுப் பேசியதாவது: நாட்டின் வளா்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய பணிகளால் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடன் பாா்க்கிறது. உலகம் முழுவதற்கும் பங்களிப்பதில் நாம் அனைவரும் உறுதியாக உள்ளோம்.
வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற வேண்டிய தீா்மானத்திற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி கூறியதாவது: தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். இதனால், அக்கட்சியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுகிறாா்கள். ஒருபுறம், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஊழலால் அவருடைய இரண்டு அமைச்சா்கள் தற்போது சிறையில் உள்ளனா். மறுபுறம், பிரதமா் நரேந்திர மோடியின் மக்கள் நலக் கொள்கைகளின் பலனை நாடு பெற்று வருகிறது. மேலும், பிரதமா் நரேந்திர மோடியின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, தில்லியில் பாஜக குடும்பம் நாளுக்கு நாள் வளா்ந்து வருகிறது. ஆத்மி கட்சியின் தவறுகளாலும், பொய்களாலும் மக்கள் கேஜரிவால் அரசின் மீது நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.