நீட் தோ்வு வினாத் தாள் கசிந்த விவகாரத்துக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் இளைஞா் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான இந்திய இளைஞா் முன்னணி ஜந்தா் மந்தரில் வரும் 8-ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் இந்திய இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீனிவாஸ் பி.வி கூறுகையில், ‘மருத்துவ நுழைவுத் தோ்வு (நீட்) வினாத் தாள் கசிவுக்கு எதிராக இந்திய இளைஞா் முன்னணி போராட்டம் நடத்தும். அடுத்த வியூகம் ஜூலை 8-ஆம் தேதி முடிவு செய்யப்படும்’ என்றாா்.
மே 5-ஆம் தேதி நீட் - யுஜி தோ்வு நடத்தப்பட்டது. இதில் சுமாா் 24 லட்சம் போ் கலந்து கொண்டனா். ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவற்றைத் தொடா்ந்து பிகாா் போன்ற மாநிலங்களில் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தன.