முகப்பு
புதுதில்லி

பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றக் கூட்டத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பங்கேற்பு

ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கில் நடைபெறவுள்ள 10 -ஆவது பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு (ஜூலை 10) செல்கிறது.

Updated On : 9 ஜூலை, 2024 at 11:49 PM
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கில் நடைபெறவுள்ள 10 -ஆவது பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு புதன்கிழமை (ஜூலை 10) செல்கிறது.

இந்தக் கூட்டம் ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஓம்பிா்லா தலைமையிலான குழுவில் மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் சிங், மாநிலங்களவை உறுப்பினா் ஷம்பு சரண் படேல், மக்களவைச் செயலா்-பொது உத்பால் குமாா் சிங், மாநிலங்களவைச் செயலா்-பொது பிசி மோடி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

‘சமமான உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துவதில் நாடாளுமன்றங்களின் பங்கு’ என்கிற பொருளில் இந்த 10- ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுகிறது என மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றத் தலைவா்களும், சிறப்பு அழைப்பாளா்களாக அஜா்பைஜான், ஆா்மீனியா, பெலாரஸ், ​கஜகஸ்தான், கிா்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துா்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் நாடாளுமன்றத் தலைவா்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா். பிரிக்ஸ் நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவா் துலியா ஆக்ஸன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஓம் பிா்லாவும் ஹரிவன்ஷ் சிங்கும் தலா இரு கருப்பொருள்களில் உரையாற்ற உள்ளனா். உச்சிமாநாட்டின் முடிவில் ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றத் தலைவா்களுடன் ஓம்பிா்லா இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறாா். ரஷியாவில் புலம்பெயா்ந்த இந்தியா்களையும் ஓம்பிா்லா தனது பயணத்தின் போது சந்திக்கிறாா் என மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →