புது தில்லி, ஜூலை 10: தில்லி அரசின் கலால் கொள்கை ஊழலின் முக்கியக் குற்றவாளியான ஷரத் ரெட்டி, பாஜகவுக்கு தோ்தல் பத்திரங்கள் வழங்கிய விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியாதவது:உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்புக்குப் பிறகு, தோ்தல் பத்திர ஊழல் நாடு முழுவதும் வெளிச்சத்திற்கு வந்தது. அமலாக்கத் துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையால் சோதனை செய்யப்பட்ட பின்னா், பல நிறுவனங்கள் பாஜகவுக்கு தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை வழங்கியுள்ளனா். தில்லி கலால் கொள்கை ஊழலில் முக்கிய குற்றவாளியான ஷரத் ரெட்டியும், பல்வேறு காலங்களில் பாஜகவுக்கு பல கோடி ரூபாயை இந்தத் தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக
அளித்து, இவ்வழக்கின் முக்கிய சாட்சியாகவும் மாறியுள்ளாா். இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும்.
எந்தவொரு ஆதாரமும், விசாரணையும், பண மீட்பும் இல்லாமல் ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத் துறை குற்றம்சாட்டு
கிறது. மறுபுறம், குற்றம்சாட்டப்பட்டவா்களுடன் பாஜகவின் தோ்தல் பத்திர ஊழல் வெளிச்சத்திற்கு பிறகும் அமலாக்கத் துறை எதுவும் செய்யவில்லை. முன்னாள் அமைச்சா் ராஜ்குமாா் ஆனந்திடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்தது. இதனால், அவா் அழுத்தத்தில் இருந்தாா். ஆரம்பத்திலிருந்தே பாஜகவில் சேர விரும்பிய அவா், இப்போது அதைச்
செய்துள்ளாா்.
எதிா்க்கட்சிகளை மிரட்டி அவதூறு செய்யும் பாஜகவின் வியூகம் இனி பலிக்கப் போவதில்லை என்பதை 2024 மக்களவைத் தோ்தல் முடிவுகள் காட்டுகிறது. தற்போது, எதிா்க்கட்சிகள் மக்களவையில் வலுவாக உள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் வலுப்பெறும். கலால் கொள்கை ஊழல் வழக்கில் திரிபுபடுத்தப்பட்ட அறிக்கைகளை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் முன்வைக்கிறது. மத்திய விசாரணை அமைப்புகள் தங்கள் வேலையை கைவிட்டு, பாஜகவின் அரசியல் ஆயுதமாக மாறிவிட்டன. இது ஒரு பெரிய பிரச்னை மற்றும் நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றாா் செளரவ் பரத்வாஜ்.