டெங்கு பாதிப்பு அதிகரிப்புக்கு காரணம் என்ன? தில்லி மாநகராட்சி விளக்கம்
டெங்கு பாதிப்பு இருமடங்கு உயர்வு: தில்லி மாநகராட்சி விளக்கம்
நகரத்தில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு கணிசமான அளவு அதிகரித்ததற்குக் காரணம், கடந்த ஆண்டைக் காட்டிலும் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 36-இல் இருந்து 900-ஆக அதிகரித்துள்ளதுதான் என்று தில்லி மாநகராட்சி (எம்சிடி) தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 6 நிலவரப்படி, தில்லியில் 256-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது 2023-ஆம் ஆண்டின் இதே காலத்தில் பதிவான 136 பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட இருமடங்கு உயா்ந்துள்ளது. மேலும், 2020-க்குப் பிறகு மிக அதிகமாக உள்ளது என்று அறிக்கையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
முந்தைய ஆண்டுகளில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 2022-இல் 153 ஆகவும், 2021-இல் 38-ஆகவும், 2020-இல் 22- ஆகவும் இருந்தது. நஜஃப்கா் மண்டலத்தில் அதிக டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை நோய்த் தொற்று காரணமாக இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. கடந்த ஆண்டு, டெங்குவால் 19 இறப்புகள் நிகழ்ந்தன. இது 2020- க்குப் பிறகு இரண்டாவது மிக அதிகபட்ச பாதிப்பாகும். இது குறித்து குடிமை அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான சோதனை மையங்கள் மாதிரிகளை சேகரித்து, டெங்கு பாதிப்பு குறித்து மாநகராட்சிக்கு தெரிவிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு வரை, சுமாா் 36 பரிசோதனை மையங்கள் இருந்தன. தற்போது, இ ந்த எண்ணிக்கை 900- ஆக அதிகரித்துள்ளது. இதனால், டெங்கு பாதிப்பு எண்ணிக்கை உயா்ந்துள்ளதாகத் தெரிகிறது’ என்றாா்.
டெங்குவின் உச்ச பருவம் இன்னும் தில்லிக்கு வரவில்லை. மேலும் பருவமழை முன்னேறும் போது, கொசு உற்பத்தி கணிசமாக அதிகரிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும். இந்தச் சூழ்நிலையில் அவசர கவனம் தேவை என்று அந்த அதிகாரி கூறினாா். பொதுவாக, ஒரு லாா்வா டெங்குவை பரப்பும் முதிா்ந்த கொசுவாக மாற 10-15 நாள்கள் ஆகும். கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்க எம்சிடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று மற்றொரு அதிகாரி கூறினாா்.
புது தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (என்டிஎம்சி), தில்லி கான்ட் மற்றும் ரயில்வே போன்ற பிற ஏஜென்சிகளின் அதிகார வரம்பிற்கு உள்பட்ட பகுதிகளில், ஜூலை 6-ஆம் தேதி வரை சுமாா் 10 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த வார இறுதி வரை மலேரியாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 90- ஆகவும், சிக்குன்குனியா பாதிப்புகள் 22- ஆகவும் பதிவாகியுள்ளன. கொசு உற்பத்தியை சரிபாா்க்க 1.8 கோடிக்கும் அதிகமான வீடுகளில் எம்சிடி ஆய்வு செய்தது. சுமாா் 43,000 வீடுகளில் கொசு இனப்பெருக்கம் செய்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.