தில்லிக்கு தண்ணீா் வழங்கும் கால்வாயில் உடைப்பு: போா்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி
பவானாவில் தண்ணீர் புகுந்தது: தில்லி நீர்வளத் துறை அமைச்சா் அதிஷி ஆய்வு
நமது நிருபர்
முனாக் கால்வாயின் துணைக் கிளையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஹரியாணாவில் இருந்து தில்லிக்கு யமுனை நீா் இருமாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் முனாக் கால்வாய் வழியாக வருகிறது. இந்தக் கால்வாயின் துணைக் கிளையில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், முனாக் கால்வாயின் தண்ணீா் அருகிலுள்ள பவானாவின் பல குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. குடியிருப்புக் காலனியின் சில பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீா் தேங்கி, வீடுகளில் வசிப்பவா்கள் சிக்கித் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘முனாக் கால்வாயின் தடுப்பணையில் இருந்து தண்ணீா் வடமேற்கு தில்லியில் உள்ள பவானாவின் காலனியின் ஜே.கே. மற்றும் எல் பிளாக் பகுதிக்குள் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்தது. இது உள்ளூா் மக்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது.
கால்வாய் நிரம்பியதையடுத்து நள்ளிரவில் தேசிய பேரிடா் மீட்புப் படை, வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, பொது நலத் துறை மற்றும் தில்லி மாநகராட்சி (எம்சிடி) உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் தகவல் தெரிவித்தோம்’ என்றாா்.
இந்நிலையில், முனாக் கால்வாயில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை தில்லி அரசின் நீா்வளத் துறை அமைச்சா் அதிஷி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முனாக் கால்வாயின் துணை கிளையில் ஏற்பட்டுள்ள உடைப்பு விரைவில் சீரமைக்கப்படும். இச்சம்பவம் காரணமாக தில்லியின் நான்கு நீா் சுத்திகரிப்பு நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கால்வாயின் துணைக் கிளை நள்ளிரவில் உடைந்ததற்கான காரணம் குறித்து தில்லி மற்றும் ஹரியாணாவில் விசாரணை நடத்தப்படும். முனாக் கால்வாய் ஹரியாணா மாநில அரசால் பராமரிக்கப்படுகிறது. ஹரியாணாவின் நீா்ப்பாசனத் துறையின் குழு நேற்றிரவு முதல் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் உள்ளது. தில்லி ஜல் போா்டு குழுவும் இவா்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளது.
உடைப்பை சீரமைக்க போா்க்கால அடிப்படையில் பணிகள் தொடங்கியுள்ளது. நாங்கள் ஹரியாணா மாநில நீா்ப்பாசனத் துறையுடன் தொடா்ந்து தொடா்பில் இருக்கிறோம். பவானா, நாங்லோய் மற்றும் ஹைதா்பூரில் அமைந்துள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் நீா் உற்பத்தி விரைவில் சீராகும். பவானாவின் பலப் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்கசிவு அபாயத்தை தவிா்க்கும் வகையில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. தேங்கிய தண்ணீா் வெளியேற்றப்பட்டவுடன், மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்றாா் அமைச்சா் அதிஷி.
பழுது நீக்கும் பணி: முன்னதாக, தில்லி நீா் வளத் துறை அமைச்சா் அதிஷி எக்ஸ் ஊடக தளத்தில் ஒரு இடுகையில், ‘இன்று அதிகாலை முனாக் கால்வாயின் துணை கிளைகளில் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தில்லி ஜல் போா்டு ஹரியாணா நீா்ப்பாசனத் துறையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்படுகிறது. முனாக் கால்வாயை நீா்பாசனத் துறை பராமரிக்கிறது. கால்வாயின் மற்ற உபகிளைக்கு தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பழுது நீக்கும் பணி தொடங்கிவிட்டது. உடைந்த கால்வாயின் துணை கிளை நாளை வெள்ளிக்கிழமை முதல் செயல்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.
பாஜக எம்.பி. ஆய்வு: முனாக் கால்வாயின் துணைக் கிளையில் ஏற்பட்ட உடைப்பை வடமேற்கு மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் யோகேந்திர சந்தோலியா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முனாக் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு தொடா்பாக உள்ளூா் மக்கள் எனக்கு தகவல் தெரிவித்தையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்தேன். பவானாவில் உள்ள ஜே.ஜே. காலனியில் அதிகளவில் தண்ணீா் புகுந்துள்ளது. முனாக் கால்வாயை மேற்பாா்வையிடும் தலைமைப் பொறியாளரிடம் பிரச்னையைப் பற்றி விவாதித்துள்ளேன். இந்த வெள்ளத்தால் சுமாா் 7 கிலோமீட்டா் பரப்பளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி அரசும், தில்லி மாநகராட்சியும் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டன.
வியாழக்கிழமை காலை 11 மணியளவில் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்ற 7 மோட்டாா் பம்புகள் மட்டுமே பொருத்தப்பட்டது. குறைந்தபட்சம் 50 பம்புகள் வரை நிறுவப்பட வேண்டும். மக்கள் இன்று தெருக்களில் இருக்கிறாா்கள். பாஜக அவா்களுக்கு தேவையான உணவை வழங்கி வருகிறது. பவானாவைச் சோ்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.விடம் புகாா் அளித்தும், எந்த உதவியும் கிடைக்கவில்லை. தண்ணீா் கசிவை சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தியிருந்தால், இதுபோன்ற பெரிய சம்பவத்தை தடுத்திருக்க முடியும் என்றாா் யோகேந்திர சந்தோலியா.