நமது சிறப்பு நிருபர்
திமுகவின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் ரூ.100 நினைவு நாணயத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இதற்கான அரசிதழ் வெளியிடப்பட்டு இந்த நாணயத்தை அச்சிடுவதற்கு மத்திய நிதித் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளியும் தாமிரமும் கலந்த இந்த நாணயத்தின் விலை ரூ.2,500 ஆகும்.
தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கடந்தாண்டு ஜூன் 3 முதல் ஓர் ஆண்டுக்கு கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதை முன்னிட்டு தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "நினைவு நாணயம்' வெளியிட மத்திய அரசுக்கு கடந்தாண்டு ஜூலை 23}ஆம் தேதி கடிதம் எழுதினார்.
முன்னாள் தமிழக முதல்வரான மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் ரூ.100 நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த நாணயத்தை அச்சிடுவதற்கு கடந்த ஜூலை 12} ஆம் தேதி மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோக தூண், "சத்யமேவ ஜெயதே', "பாரத்' ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் "இந்தியா' என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் "கலைஞர் எம். கருணாநிதி' உருவப்படமும், கீழே அவர் பயன்படுத்திய "தமிழ் வெல்லும்' என்ற வாசகமும் இடம் பெறுகிறது. "கலைஞர் எம். கருணாநிதி பிறந்த நூற்றாண்டு' (1924-2024) என தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் இடம்பெறும்.
சுமார் 35 கிராம் எடை கொண்ட இந்த ரூ.100 நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் தாமிரமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையே தலா 5 சதவீதமும் கலந்திருக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ.2,500 என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நாணயத்தை முறைப்படி வெளியிட தமிழக அரசு இதுவரை மத்திய அரசிடம் அனுமதி கோரவில்லை. மத்திய அரசும் இதற்கான முயற்சி எடுக்கப்படாத சூழ்நிலையில் இந்த நாணயம் காசாலைகளில் அச்சிடப்பட்டு வந்தவுடன் ரிசர்வ் வங்கி விற்பனையகங்கள் மற்றும் தபால் நிலையங்களில் விற்பனைக்கு வரும் என மத்திய நிதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.