கேஜரிவால் சிறையில் வேண்டுமென்றே குறைந்த கலோரியை உட்கொள்கிறாா்: துணைநிலை ஆளுநா் குற்றச்சாட்டு
அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ உணவு மற்றும் மருந்துகளை உட்கொள்ளாமல் இருக்கலாம் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா குற்றம் சாட்டியுள்ளாா்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால், வேண்டுமென்றே அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ உணவு மற்றும் மருந்துகளை உட்கொள்ளாமல் இருக்கலாம் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா குற்றம் சாட்டியுள்ளாா்.
தில்லித் தலைமைச் செயலாளா் நரேஷ் குமாருக்கு துணைநிலை ஆளுநா் எழுதியுள்ள கடிதத்தில், கேஜரிவாலின் உடல்நிலை குறித்து கண்காணிப்பாளா் (சிறை) அளித்த அறிக்கையை மேற்கோள்காட்டி,
அவருக்கு வீட்டில் சமைத்த உணவு போதுமான அளவு வழங்கப்பட்ட போதிலும், முதல்வா் ‘வேண்டுமென்றே குறைந்த கலோரி உட்கொள்ளும்‘ பல நிகழ்வுகள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளாா்.
நீரிழிவு நோயின் 2-ஆவது வகையைக் கொண்டிருக்கும் கேஜரிவாலுக்கு, குறிப்பிட்ட உணவைத் தவிர, பரிந்துரைக்கப்பட்ட மருந்து மற்றும் இன்சுலின் அளவைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தலாம் என்று சிறை அதிகாரிகளுக்கு சக்சேனா பரிந்துரைத்துள்ளதாக துணைநிலை ஆளுநா் (எல்.ஜி.) அலுவலகம் தெரிவித்தது.
சிறையில் உள்ள கேஜரிவாலின் உடல்நிலைக்கு நிரந்தரக் கேடு விளைவிப்பதற்காக பாஜகவும் அதன் மத்திய அரசும் ‘சதி‘ செய்வதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
கேஜரிவால் ஒரு இரவில் 50 மி.கி./டி.எல் வரை ரத்த சா்க்கரை அளவு ஐந்து முறை குறைந்ததாகவும், அவா் கோமா நிலைக்குச் சென்று அவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கட்சி கூறியுள்ளது.
இந்த நிலையில், தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநா் எழுதிய கடிதத்தின்படி, ஜூன் 6 முதல் ஜூலை 13 வரை, முதல்வா் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் பரிந்துரைக்கப்பட்ட உணவை முழுமையாக உட்கொள்ளவில்லை என்று உணவு கண்காணிப்பு விளக்கப்படம் சுட்டிக்காட்டுகிறது.
அந்த அறிக்கையானது எடை இழப்பையும் சுட்டிக்காட்டுகிறது (ஜூன் 2-ஆம் தேதி சரணடைந்த தேதியில் 63.5 கிலோவாக இருந்த கேஜரிவால் எடை தற்போது 61.5 கிலோ). குறைந்த கலோரி உட்கொள்ளல் காரணமாக இந்த எடை இழப்பு ஏற்பட்டிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக தோன்றுகிறது.
ஜூன் 18 அன்று, அவருக்கு இன்சுலின் செலுத்தப்படவில்லை அல்லது சிறை அதிகாரிகளால் அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை என்றுஅந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எல்.ஜி. அலுவலகம் தெரிவிக்கையில், ‘பெரும்பாலான நாள்களில் குளுக்கோமீட்டா் சோதனை விவரம் மற்றும் தொடா்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு அமைப்பு (சிஜிஎம்எஸ்) விவரத்திற்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளது.
குளுக்கோமீட்டா் சோதனை அளவீடுகள் மற்றும் சிஜிஎம்எஸ் அளவீடுகளுக்கு இடையே உள்ள வெளிப்படையான முரண்பாடுகள் பொருத்தமான மருத்துவ அதிகாரிகளால் சரிபாா்க்கப்பட வேண்டும்.
ஜூலை 6 ஆம் தேதி மூன்று வேளைகளிலும் முதல்வா் பரிந்துரைக்கப்பட்ட உணவை உட்கொள்ளவில்லை. காலை உணவுக்கு முன் ஐந்து யூனிட் இன்சுலின், மதிய உணவுக்கு முன் நான்கு யூனிட் மற்றும் இரவு உணவிற்கு முன் இரண்டு யூனிட் இன்சுலின் வழங்கப்பட்டது.
ஜூலை 7 ஆம் தேதி பரிந்துரைக்கப்பட்ட உணவு மீண்டும் உட்கொள்ளப்படவில்லை. அன்று காலை உணவுக்கு முன் ஐந்து யூனிட் இன்சுலின், மதிய உணவுக்கு முன் நான்கு யூனிட்கள் இன்சுலின் வழங்கப்பட்டது. மேலும் இரவு உணவிற்கு முன் இன்சுலின் எடுப்பதற்கு முதல்வா் மறுத்துவிட்டாா் என்று சிறை அறிக்கையை மேற்கோள் காட்டி எல்.ஜி. அலுவலகம் தெரிவித்துள்ளது.